உயரமான புற்கள் மற்றும் பல மரங்கள் உடைய காட்டில் கிட்டதட்ட ஒரு மணி நேரம் நாங்கள் காத்திருந்தோம். ஆனாலும் காட்டு யானையை எங்களால் பார்க்க முடியவில்லை. 8 பேர் கொண்ட எங்களது குழு கேரளாவின் தொலைதூர பஞ்சாயத்தான எடமால்குடிக்கு சென்றது, ஆனாலும் ஒன்றையும் பார்க்க முடியவில்லை. யானை என்று கத்தும் கிராமவாசிகளின் சத்தத்தை எங்களால் கேட்க முடிந்தது ஆனால் யானையை பார்க்க முடியவில்லை. அருகில் உள்ள கிராமங்களில் இருந்த உரிமையாளர்கள் சிலர் குரல்கள் எழுப்பினர், யாரும் தண்ணீருக்கு அருகில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினர். சொசைட்டிகுடிக்கு செல்லும் வழியில் ஆதிவாசிகள் எங்களை கடந்து சென்றனர், அங்கிருந்து தான் இப்போது நாங்கள் வந்தோம், "அவன் ஆற்றின் கீழே இறங்கி விட்டான். கவனமாக இருங்கள்", என்று கூறினர் ஆதிவாசிகள்.

அந்த நேரத்தில் நாங்கள் மணலாறு நதியை கடக்க முயன்றதால் இது எங்களுக்கு ஆறுதல் அளிக்கவில்லை. அங்கு மூங்கில், மரக்கிளைகள், புல்லுருவிகள், கயிறுகள் மற்றும் மரத்துண்டுகளாலான "வாழும் பாலம்" ஒன்று இருந்தது. ஆனால் அது பழுதடைந்து இருந்தது மழைக்காலத்தில் மட்டுமே அதனை பயன்படுத்த முடியும். நாங்கள் அருகிலுள்ள வயலுக்கு மீண்டும் திரும்பினோம். சத்தங்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது. எங்களுடன் இருந்த வன கண்காணிப்பாளர் அச்சுதன். எம், முதவன் ஆதிவாசி சமூகத்தை சேர்ந்தவரே, அவருக்கு யானையின் இருப்பிடம் தெரிந்திருந்தது. அந்த தூரத்தில் இருந்த மக்கள் பெரும்பாலும் மரத்தின் மீது அமைக்கப்பட்ட பரண்களை பயன்படுத்தி இருப்பார்கள். ஒருவேளை அங்கிருந்து தான் அவர்கள் அவனை கண்காணித்து கொண்டு இருப்பார்களோ என்னவோ. தனித்து விடப்பட்ட காட்டு யானை ஒரு கெட்ட செய்தியே. அதற்கும் மதம் பிடித்திருக்கவும் வாய்ப்புகள் உண்டு மற்றும் எரிச்சலான மந்தையால் துரத்தப்பட்டு இருப்பதற்கான வாய்ப்பும் உண்டு.

இந்த நேரத்தில் தான் உங்களுக்கு மோசமான யானை கதைகள் அனைத்தும் நினைவுக்கு வரும். ஒரு மதம் பிடித்த யானைக்கு அதன் டெஸ்டோஸ்டிரோனின் அளவு சாதாரணமாக இருப்பதை விட 60 சதவீதம் அதிகமாக இருக்கும் என்பது நினைவு வரும், மேலும் அது சண்டையிடப் போவதாகவும் தோன்றும். நாங்கள் யாரும் அதை கட்டுப்படுத்தப் போவதில்லை (எங்களது டெஸ்டோஸ்டிரோனின் அளவு அவ்வளவு அதிகமும் இல்லை), நாங்கள் ஒரு மரநிழலில் தங்கினோம். ஒவ்வொரு முறை மரங்களுக்கிடையில் ஏதாவது நகர்ந்த போது நாங்கள் அது வனக்காவலரா? அல்லது யானையா? என்று வியந்தோம். இந்த களேபரத்தில், அந்த நேரத்தில் இடுக்கியின் அழகான வனப்பகுதியினை எங்களால் ரசிக்க முடியவில்லை.

கற்றுக் கொண்ட பாடம்: தெரியாத நிலப்பரப்பில் குறுக்கு வழியை ஒரு போதும் நம்ப வேண்டாம். அது அழிவுக்கான அழைப்பு.

PHOTO • P. Sainath
PHOTO • P. Sainath

இடது: மரத்தின் மேல் அமைக்கப்பட்ட பரண். வலது: எங்களது துணிச்சலான வனக்காவலர்கள் சின்னப்ப தாஸ் மற்றும் அச்சுதன் இருவருமே முதவன் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

நாங்கள் கொச்சியிலிருந்து புறப்பட்டோம், இரவு மூணாறில் தங்கினோம். அதிகாலையில் பெட்டிமுடி வரை சென்றோம் அங்கிருந்து சிரமமான 18 கிலோமீட்டர் தூர மலைப் பாதையில் எடமால்குடிக்கு வந்து சேர்ந்தோம். இந்தப் பஞ்சாயத்தில் எங்களது நேர்காணல்களை முடித்துவிட்டு மறுநாள் நாங்கள் வெளியேறி விடுவோம் என்று புத்திசாலித்தனமாக எண்ணினோம். மறுபடியும் அதே சிக்கலான 18 கிலோ மீட்டர் தொலைவை ஏன் எடுக்க வேண்டும்? நாம் குறுக்கு வழியில் சென்று மற்றொரு திசையில் பயணிக்கலாம் என்று எண்ணினோம். அதாவது தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தின் வால்பாறைக்கு செல்லலாம் என்று எண்ணினோம். அது செங்குத்தான மேல் நோக்கி இருக்கும் மலைப் பாதை தான், ஆனால் 8 முதல் 10 கிலோ மீட்டர் தொலைவு தான் இருக்கும். வால்பாறையில் இருந்து கொச்சிக்கு செல்வது மூணாறை விட தூரம் குறைவு தான்.

 ஆனால் அது காட்டு யானையின் பகுதி மேலும் நாங்கள் மாட்டிக் கொண்டோம்.

கடைசியாக, அருகிலுள்ள குடி (குக்கிராமத்தில்) இருந்து மூன்று இளம் ஆதிவாசி ஆண்கள் எங்களைக் கடந்து சென்றனர், அவர்களில் ஒருவர் கையில் சிறிய பையை வைத்திருந்தார். சிறிது நேரம் கழித்து ஒரு சத்தம் அது எங்களுக்கு அந்த பையில் பட்டாசுகள் இருந்ததை தெரிவித்தது. எங்களுக்கு யானையின் பிளிறல் எதுவும் கேட்கவில்லை. காட்டு யானையை போன்ற ஒரு பெரிய உருவம் எப்படி கண்ணுக்கு தெரியாமல் போகும்? சில நிமிடங்களுக்குப் பின்னர் அதே மூன்று இளைஞர்கள் எங்களை கடந்து சென்றனர். காட்டு யானைக்கு நிச்சயமாக பட்டாசை பிடித்திருக்காது. "அவன் உள்ளே நகர்ந்து சென்று விட்டான். இப்போது வேகமாக நதியை கடந்துவிடுங்கள்", என்று அவர்கள் கூறினர். நாங்கள் அவ்வாறே செய்தோம். ஆனாலும் நாங்கள் யானையை பார்க்கவில்லை. அடுத்த பக்கத்திலும் கூட பார்க்கவில்லை. ஆனால் குவியல் குவியலாக யானை சாணத்தை பார்த்தோம். அது புதியதா என்று ஆராய்வதில் நாங்கள் ஆர்வம் காட்டவில்லை.

மீதமுள்ள மந்தை நாங்கள் எந்தப் பாதை வால்பாறைக்கு இட்டுச்செல்லும் என்று நினைத்தோமோ அந்த பாதையை தேர்ந்தெடுத்து இருக்கிறது. எங்களது துணிச்சலான வனகண்காணிப்பாளர் உட்பட ஆதிவாசிகள் யாரும் அந்த பாதைக்கு வரவில்லை. இப்போது எங்களுக்கு இருக்கும் ஒரே வழி மிக நீண்ட பாதையில் செல்வது தான், அதில் பல செங்குத்தான மேல் நோக்கிய மலைப் பாதையும், சரிவுகளும் உள்ளது. நாங்கள் பல மணி நேரமாக ஆபத்தான சரிவுகளில் ஊர்ந்து செல்வதை போல தோன்றியது.

உதவிக் குறிப்பு: உங்கள் பழைய காலணிகள் எவ்வளவு மோசமாக இருந்தாலும் ஒரு நீண்ட மலையேற்றப் பயணத்தின் போது நான் செய்ததை போல புதிய காலணியை நீங்கள் ஒரு போதும் பயன்படுத்த வேண்டாம்.

எட்டு கிலோமீட்டர் நடை பயணமாக இருந்திருக்க வேண்டியது 25 கிலோமீட்டராக தோன்றியது. முதுகுப்பை மற்றும் கனமான பைகளில் பெரும்பாலும் கேமராக்கள் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சுமந்து கொண்டு 8 மணி நேரத்திற்கு மேல் நடந்ததோம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யானை தென்படவில்லை, அதனால் எடமலையாறு நதியில் ஒரு அரை மணி நேரம் நாங்கள் தங்கி ஓய்வெடுத்துவிட்டு வந்தோம். அதிர்ஷ்டவசமாக இது ஒரு வறண்ட பருவமாக இருந்தது. மழை மட்டும் பெய்திருந்தால் ரத்தம் குடிக்கும் அட்டைகள் இப்பாதையை ஆட்சி செய்திருக்கும். 36 மணி நேரத்திற்கு முன்பு பெட்டிமுடியில் இருந்து கிளம்பி ஒரு நாற்பது மணி கிலோமீட்டர் பயணித்து நாங்கள் வால்பாறையை வந்தடைந்த போது அது நூறு கிலோ மீட்டரைப் போல தோன்றியது. ஆனால் நாங்கள் இன்னமும் யானையை பார்க்கவில்லை.

இந்தக் கட்டுரை முதலில் psainath.org இல் வெளியிடப்பட்டது

தமிழில்: சோனியா போஸ்

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.

பி.சாய்நாத் இந்திய கிராமங்களை, அவற்றின் ஆன்மாவை ஆவணப்படுத்தும் People's Archive of Rural India-ன் நிறுவனர்-ஆசிரியர். பல வருடங்களாகக் கிராமப்புற நிருபராக இந்தியா முழுக்கப் பயணிப்பவர். 'Everybody Loves a Good Drought' எனும் நூலின் ஆசிரியர்.

Other stories by P. Sainath