ஹசன் அரா வளர்க்கும் மூன்று ஆடுகளும் முறையே மூன்று குட்டிகள் ஈன்றது குறித்து மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார். அதில் ஆறு குட்டிகள் இந்த ஆண்டு (2018) அக்டோபர் மாதம் 30 அன்றும், மீதமுள்ள மூன்று குட்டிகள் அதற்கு முந்தைய நாளும் இப்புவிக்கு வந்துள்ளன. அந்த ஆட்டுக் குட்டிகள் அப்போது மிகுந்த சிறியவையாகவும், தானே பால் குடிக்கும் வகையிலும் உள்ளதால், அவைகளுக்கு போதிய பால் கிடைக்கும் வகையில் அவர் மிகுந்த அக்கறையோடு செயல்படுகிறார். எனினும், ஆட்டுக் குட்டிகள் வளர்ந்து பெரியதானதும் அவை வருமானம் ஈட்டித் தரும் மூலதனங்கள் என்பதும் அவருக்கு தெரிந்தே இருக்கிறது.
பீகார் மாநிலம் சிதமர்ஹி மாவட்டம் பஜ்பட்டி பகுதியுள்ள பரி புல்வாரியா கிராமத்தில் ஹசன் அரா வசித்து வருகிறார். இந்த பஞ்சாயத்தில் உள்ள ஏறத்தாழ 5,700 பேரில் பலர் ஏழ்மையிலுள்ள, வாழ்வாரத்திற்காகப் போராடும் விவசாயிகள் அல்லது நிலமற்ற விவசாயக்கூலிகள். ஹசன் அரா அவர்களுள் ஒருவர்.
அவர் அவரது மாமா முஹம்மது ஷபிரை மிகக்குறைந்த வயதிலேயே மணந்துள்ளார். அவர் ஐந்து ஆண்டுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள தோல் பை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிவதற்காக சென்றுள்ளார். அதற்கு முன்பு வரை, அவரும் ஒரு விவசாயக்கூலியாகப் பணிபுரிந்துள்ளார். “அவர் மாதத்திற்கு 5,000 ரூபாய் சம்பாதிக்கிறார். சிலசமயம் அதில் 2,000 ரூபாயை வீட்டுக்கு அனுப்புவார். அப்போதிருந்து அவரால் அவரது சொந்த தேவைகளை மட்டுமே பார்த்துக்கொள்ள மட்டுமே முடிகிறது. எனவே, அவரது தரப்பிலிருந்து பணம் வருவது என்பது ஒழுங்கற்றதாகவே உள்ளது,” என்றார் ஹசன் அரா.







