மாருதி வேன் நிரம்பிவிட்டது, புறப்படுவதற்கு தயாராகிவிட்டது. கிடைத்த இடத்தையெல்லாம் விவசாயிகள் ஆக்கிரமித்துக்கொண்டனர். ஒருவரின் மடியில் கூட ஒருவர் அமர்ந்துகொண்டு ஒரு சிலர் இருந்தனர். அவர்களின் பைகளும், நடக்க பயன்படுத்தும் குச்சிகளும் பின்புற இருக்கையை தாண்டியும் நீண்டு கிடக்கின்றன.
ஆனால் மங்கள் காட்கேவுக்கு அருகில் இருந்த இருக்கை மட்டும் காலியாக இருந்தது. அவர் வேறு யாரையும் அந்த இடத்தில் உட்கார அனுமதிக்கவில்லை. அது ஒருவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பின்னர் மீராபாய் லங்கே வேனில் ஏறி, அந்த காலி இருக்கையில் அமர்ந்துகொண்டு, தனது புடவையை சரிசெய்கிறார். அப்போது மங்கள் தனது கையை அவரது தோளில் போட்டுக்கொள்கிறார். கதவு மூடப்படுகிறது. மங்கள் டிரைவரிடம் போகலாம் என்று சொல்கிறார்.
மங்கள்(53) மற்றும் மீராபாய்(65) இருவரும் நாசிக்கின் தின்டூரி தாலுகாவில் உள்ள ஷிண்ட்வாட் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே கிராமத்தில் பல பத்தாண்டுகள் ஒன்றாக இருந்திருந்தாலும் கடந்த சில வருடங்களில்தான் அவர்களது நட்பு நெருக்கமடைந்திருக்கிறது.. “நாங்கள் ஊரில் ஓய்வின்றி வேலைகளில் மூழ்கியிருப்போம். போராட்டங்களில்தான் எங்களுக்கு பேசுவதற்கு நிறைய நேரம் கிடைக்கும்“ என்று மங்கள் கூறுகிறார்.
மார்ச் 2018ம் ஆண்டு நாசிக்கில் இருந்து மும்பை வரையிலான விவசாயிகளின் நீண்ட பேரணியில் இருவரும் ஒன்றாக இருந்தனர். பின்னர் நவம்பர் 2018ல் தில்லியில் நடந்த விவசாயிகள் பேரணிக்கும் ஒன்றாக சென்றார்கள். இப்போது நாசிக்கிலிருந்து தில்லி வரை நடக்கும் வாகன பேரணியிலும் அவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப்போராட்டத்தில் எதற்காக கலந்துகொண்டுள்ளீர்கள் என்ற கேள்விக்கு “எங்கள் வயிற்றுக்காக“ என்று மங்கள் கூறுகிறார்.
மத்திய அரசு செப்டம்பர் மாதம் கொண்டு வந்த மூன்று வேளாண் திருத்த சட்டங்களையும் எதிர்த்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தேசிய தலைநகரின் எல்லையில் 3 வெவ்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், ஒற்றுமையை காட்டவும், மஹாராஷ்ட்ராவில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் டிசம்பர் 21ம் தேதி நாசிக்கில் ஒன்றுகூடி, அங்கிருந்து, தோராயமாக 1,400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டெல்லி நோக்கி வாகன பேரணி சென்றனர். இவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாயிகள் சங்கம் ஒருங்கிணைத்துள்ளனர்.
இந்த போராளிகளில் மங்கள் மற்றும் மீராபாயும் அங்கம் வகித்துள்ளனர்.





