சாம்னி மீனாவால் அவரது வயது குறித்து நினைவு கூற இயலவில்லை. ஆனால், அவரது இளம் பிராயத்தில் சுவைத்த உணவுகளின் சுவை குறித்து நினைவு கூர்ந்தார்: “அந்த சுவை தற்போது மாறிவிட்டது. அந்த மாதிரியான சுவையை நீங்கள் இப்போது எங்கும் சுவைக்கவே முடியாது. தற்போது நாட்டு(பாரம்பரிய) விதைகள் எங்கும் இல்லை.விதைகளின் வகைகளைக் கண்டறிவதும் மிகவும் கடினம்” என்று கூறினார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் நகரத்தின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள காதி கிராமத்தில் சாம்னிபாய் வசித்து வருகிறார். அவருக்கு வயது 80 இருக்கக்கூடும். அவரது சிறுவயதில் இருந்து விதைகளை சேமித்து வருகிறார். அவரும் அவரது கணவரும் எவ்வாறு வீடு கட்டினார்கள் மற்றும் விவசாயம் செய்தார்கள் என்பது குறித்தும், உயிர் பிழைத்தலுக்காக மட்டுமே எந்த அளவு அவர்கள் உழைத்தார்கள் என்பது குறித்தும் நினைவு கூர்ந்தார். அதுமட்டுமல்லாது, தற்போதைய நிலையை விட அவரது இளமைக் காலத்தில் வாழ்வும், உணவு முறையும் எவ்வாறு மேம்பட்டிருந்தது என்பது குறித்தும் அவர் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக சாம்னிபாயும் அவரது குடும்பமும் டஜன் கணக்கான பாரம்பரிய விதைகளைப் பாதுகாத்து வருகின்றனர். தற்போது, அவரது மரபு அறிவினை அவரது மருமகள்களுக்கும் கடத்தி வருகிறார். “பெண்கள் சிறப்பான வகையில் விதைகளை பாதுகாக்கக் கூடியவர்கள். அவர்கள் அதன் மீது அக்கறை செலுத்துகின்றனர். மறுபடியும் பூர்த்திச் செய்வதையும் நினைவில் கொள்கின்றனர். விதை சேகரிக்கும் இந்த மொத்த செயல்முறையும் விவரங்களை அடிப்படையாகக் கொண்டது” என்று சாம்னிபாய் கூறினார்.
இதுகுறித்த சம்பவத்தை நினைவு கூர்ந்த அவர்,“எங்கள் கிராமம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாட்களை நான் நினைத்து பார்க்கிறேன். அது 1973 ஆம் ஆண்டு நடந்தது. எங்கள் கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளும் தண்ணீரில் மூழ்கின. எங்கள் பொருட்கள் எல்லாம் பாழாகின, ஆனால் நான் விதைகளைக் குறித்தே பெரிதும் அக்கறைக் கொண்டிருந்தேன். அதற்கே நான் முன்னுரிமை அளித்தேன். அந்த விதைகள் தான் தற்போது என்னிடம் இருக்கின்றன. அவை விவசாயிகளுடைய வாழ்வில் மிகமுக்கியப் பங்கு வகிக்கின்றன” என்று கூறினார்.













