சேதுவின் மனைவி ஆறாயி ஒரு ஐந்து நிமிடங்கள் தாமதமாக வந்திருந்தால் அவரைப் பிணமாகத் தான் பார்த்திருக்க வேண்டும். ஆறாயி வீட்டிற்குள் நுழைவதற்கும், சேது கழுத்தில் தூக்குக் கயிறை மாட்டிக் கொள்ளவும் சரியாக இருந்தது.
“கொஞ்சம் தவறியிருந்தால் செத்திருப்பேன்” என்கிறார் சேது என்கிற கே. லேகன். குறு விவசாயியான சேது தன்னுடைய விபரீத விளையாட்டு நிறைவேறாமல் போனதற்குப் பெருமூச்சு விடுகிறார். ஆறாயி அலறி கதறியதால், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் விரைந்து வந்து, சேதுவை தரைக்கு இறக்கினார்கள். அந்தக் கணம் அத்தோடு கடந்தது.
அது நவம்பர் 6, 2016. ஐம்பதுகளில் இருந்த சேது தன்னுடைய ஒன்றரை ஏக்கர் நிலத்திற்குப் போனார். எப்படித் தன்னுடைய நெற்பயிரை காக்கப் போகிறோம் என்கிற எண்ணமே அவருக்கு வேதனை தந்தது. தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் தாயனூரில் உள்ள அவரின் களை இழந்த வயலின் காட்சியே அவரைக் குலைத்தது. இரண்டாம் முறையாக விதை விதைத்தும் நெற்கதிர்கள் முளைவிடவே இல்லை.
“நான் மாலை வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். என் மனைவியும், மகன்களும் வேறு வயல்களில் கூலி வேலைக்குப் போயிருந்தார்கள். எப்படி வாங்கிய கடன்களை அடைப்பது, எப்படி வாழ்க்கையை ஓட்டுவது என்றெல்லாம் யோசித்தேன். என்ன செய்வது என்றே புலப்படாத நிலையில் தற்கொலை முடிவை எடுத்தேன்.” என்கிற சேதுவுக்கு மாவட்ட கூட்டுறவு வங்கி, தனியார் கடனாளர்கள் ஆகியோரிடம் வாங்கிய கடன் ஒன்றரை லட்சம் உள்ளது
சேதுவின் தற்கொலை முயற்சி நடந்து சில மாதங்கள் கழித்து, ஏப்ரல்-மே 2017 மாதங்களில் காவிரி டெல்டா பகுதியை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். வாயில் எலிகளைக் கவ்வியபடியும், மனித மண்டை ஓடுகளை ஏந்தியபடியும், தரையில் தவழ்ந்தும், புரண்டும் பல்வேறு முறைகளில் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். தங்களுடைய கடனை தள்ளுபடி செய்யவேண்டும் எனப் போராடினார்கள். இந்தப் பகுதியை சேர்ந்த பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள், பிறர் அதிர்ச்சி தாளாமல் மாரடைப்பில் இறந்து போனார்கள்.
ஜனவரி 2017-ல் மனித உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பினர் (People’s Union For Civil Liberties) இந்தப் பகுதிக்கு வருகை தந்தார்கள். விவசாயச் செயற்பாட்டாளர்கள், சமூகச் சேவகர்கள், மாணவர்கள், மருத்துவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழு இப்பகுதியில் ஏற்பட்ட ஐம்பது திடீர் மரணங்கள், தற்கொலைகள் குறித்து ஆய்வு செய்தார்கள். உள்ளூர் விவசாய அமைப்புகள் மாரடைப்பால் ஜனவரி-ஜூன் 2017 காலத்தில் இறந்து போனவர்கள் எண்ணிக்கை இருநூறு இருக்கும் என்கின்றன. டிசம்பர் 2016 மாதத்தில் மட்டும் 106 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு ஜனவரி 5, 2017-ல் அனுப்பிய நோட்டீஸ் மூலம் தெரிய வருகிறது.
இவையெல்லாம் தமிழகத்தைப் பூதாகரமான பிரச்சனை சூழ்ந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது. கிழக்குத் தமிழ்நாட்டில் நதியும், கடலும் சந்திக்கும் செழிப்பான பகுதியான காவிரி நதிப்படுகையில் உள்ள ஒவ்வொரு கிராமத்தின் விவசாயிகளும் தண்ணீர் பிரச்சினை முழுத் தலைவலியாக ஆகிவிட்டது என வேதனையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இது மனிதர்கள் உருவாக்கிய பிரச்சினை என்று அவர்கள் அழுத்தி சொல்கிறார்கள். இயல்பான பஞ்ச வருடங்களை விட இந்த வருட நிலைமை மோசமாக உள்ளது.





