தானே மாவட்டத்தின் நிம்பாவலி கிராமத்தில் சப்ரியா மலை அடிவாரத்தில், மைய மும்பையிலிருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, எங்களின் கரேல் பதா. வார்லி பழங்குடியினரின் இந்த சிறிய ஊரில் 20-25 வீடுகள் மட்டுமே இருக்கின்றன.
ஒவ்வோர் ஆண்டையும்போலவே, இந்த ஆண்டும், தீபாவளித் திருவிழாவை பதா பாரம்பரியத்துடன் கொண்டாடியது. இந்த மாதத்தின் தொடக்கத்தில், எல்லோரும் திருவிழாவுக்கான தயாரிப்பில் மும்முரமாக இறங்கிவிட்டனர்.
வாக்பர்சி, பார்கி திவ்லி, மோதி திவ்லி, பாலிப்பிரதி பதா என எங்கள் சமூகத்தினருக்கு தீபாவளியில் நான்கு முக்கியமான நாள்கள் உண்டு. இந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி முதல் 8வரை கொண்டாடினோம்.
வார்லி இனத்தினர் புலியை கடவுளாகக் கருதுகின்றனர். வாக்பர்சியின்போது நாங்கள் புலியிடம் பிரார்த்தனை செய்கிறோம். பழங்குடியினர் பதாகள் பொதுவாக வனப்பகுதியில் அமைந்திருக்கும். முந்தைய காலத்தில், வார்லி இனத்தினர் பிழைப்புக்காக முழுவதுமாக காட்டையே நம்பியிருந்தனர். மேய்ச்சலுக்காக கால்நடைகளை காட்டுப்பகுதிக்குதான் கூட்டிச்செல்வார்கள். இன்னும் நிறைய பேர் அப்படித்தான் செய்கிறார்கள். தங்களைத் தாக்கவேண்டாமென அவர்கள் புலியிடம் பிரார்த்தனை செய்தனர். பயத்தைத் தாண்டி அவர்களுக்கு மரியாதை வந்தது.












