ஜானு வாகேவின் குடிசைகளில் வாழ்பவர்களும் 15 கட்காரி ஆதிவாசி மக்களும் அபரிமிதமான வளர்ச்சியை இன்னும் கொஞ்ச நாளில் பார்க்கவிருக்கிறார்கள். பாதிக்கப்படக் கூடிய வாய்ப்பு உள்ள பழங்குடி சமூகம் என மகாராஷ்டிராவில் குறிக்கப்படுபர்கள் அவர்கள். அவர்களுக்கு கிடைக்கப் போகிற வளர்ச்சி என்பது அவர்களுக்கானதாக இருக்கப்போவதில்லை. தானே மாவட்டத்தில் அவர்கள் வசித்து வரும் குக்கிராமம் கூடிய விரைவில் மாநில அரசின் சம்ருதி மகாமர்க் திட்டத்தினால் காணாமல் போகவிருக்கிறது. சம்ருதி மகாமர்க் என்றால் வளர்ச்சி தரும் நெடுஞ்சாலை என்று அர்த்தமாம்.
"இதுதான் என்னுடைய வீடு. இங்குதான் என் வாழ்க்கை முழுவதையும் கழித்திருக்கிறேன். என்னுடைய தந்தையும் தாத்தாவும் இங்குதான் வாழ்ந்திருந்தார்கள். இப்போது வந்து அவர்கள் (மகாராஷ்டிர அரசு) எங்களை வெளியேறச் சொல்லுகிறார்கள். எழுத்துப்பூர்வமான எந்தவித முன்னறிவிப்பும் எங்களுக்கு கொடுக்கப்படவில்லை," என்கிறார் 42 வயதாகும் ஜானு. "நாங்கள் இங்கிருந்து எங்கே போவோம்? நாங்கள் எங்கே எங்களுடைய வீட்டை கட்டுவோம்?"
அவருடைய குடிசை பிவாந்தி தாலுகாவின் சிரத்பதா கிராமத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. ஒரு சிறிய அறை, மூங்கில் தடுப்பால் பிரிக்கப்பட்டிருக்கிறது. மறுபக்கத்தில் சமையலறை. ஒரு கரி அடுப்பு இருக்கிறது. தரை மாட்டுச் சாணத்தால் மெழுகப்பட்டிருக்கிறது. குடிசை வேயப்பட்ட சுவர்கள் குச்சிகளில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஜானு மீன் பிடிப்பார். ஒருநாள் விட்டு ஒருநாள்தான் வேலை. அவருடைய மனைவி வசந்தி, குறுகலான கரடுமுரடான ஆறு கிலோமீட்டர் பாதையை கடந்து, படாகா டவுனில் இருக்கும் சந்தைக்கு சென்று மீன் விற்பார். 5-6 கிலோ எடை கொண்ட ஒரு கூடையைத் தலையில் சுமந்து செல்வார். ஒரு நாளைக்கு நானூறு ரூபாய் வரை 15 நாட்களுக்கு ஒரு மாதத்தில் சம்பாதிக்கின்றனர். குடும்பத்தில் இருப்பதோ நான்கு பேர். இடைப்பட்ட நேரங்களில் ஜானுவும் வசந்தியும் விவசாயக் கூலிகளாக சிரத்பதா கிராமத்தில் வேலை பார்க்கின்றனர். வெள்ளரிக்காய், கத்தரிக்காய், மிளகாய் போன்ற காய்கறிகளை பறிக்கும் வேலை செய்து ஒரு நாளைக்கு 250 ரூபாய் வரை அவர்கள் சம்பாதிக்கிறார்கள்.










