சமிதாவின் வீட்டிலிருந்து துணிக்கட்டுகள் அருகே இருக்கும் குடியிருப்புக்கு இப்போது போவதில்லை. இரண்டு மாதங்களுக்கு முன் வரை, வடா டவுனின் அஷோக்வன் காம்ப்ளக்ஸ்ஸில் இருக்கும் குடும்பங்களின் துணிகளை ஒவ்வொரு நாள் காலையும் வாங்கி வருவார். கையிலும் தலையிலும் மூட்டைகளை தூக்கிக் கொண்டு இரண்டு கிலோமீட்டர் நடந்து பனுஷலி தொழிலாளர் குப்பத்தில் இருக்கும் வீட்டுக்கு செல்வார். அங்கு துணிகளுக்கு இஸ்திரி போட்டு, மடித்து வைத்து அன்று மாலையே குடும்பங்களுக்கு சென்று கொடுத்துவிடுவார்.
“ஊரடங்கு தொடங்கியதிலிருந்து எனக்கு வேலைகள் வருவதில்லை,” என்கிறார் சமிதா மோர். ஒரு நாளைக்கு நான்கு ஆர்டர்கள் கிடைத்த நிலையிலிருந்து மார்ச் 24ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்குக்கு பிறகு வாரத்துக்கே ஒரு ஆர்டர் மட்டும்தான் சமிதாவுக்கு கிடைக்கிறது. 100லிருந்து 200 ரூபாய் வரை அன்றாடம் கிடைத்துக் கொண்டிருந்த அவரின் வருமானம் – சட்டை அல்லது பேண்ட்டுக்கு இஸ்திரி போட ஐந்து ரூபாயும் புடவைக்கு 30 ரூபாயும் வாங்குகிறார் – வாரத்துக்கே 100 ரூபாய் என்கிற அளவுக்கு ஏப்ரல் மாதத்தில் குறைந்தது. “இவ்வளவு குறைவான வருமானத்தை கொண்டு நான் எப்படி வாழ்வது?” என அவர் கேட்கிறார்.
சமிதாவின் கணவரான சந்தோஷ்ஷுக்கு வயது 48. ஆட்டோ டிரைவராக வேலை பார்த்தவர். 2005ம் ஆண்டில் வடா டவுனருகே செல்கையில், யாரோ ஒருவர் ஆட்டோ மீது எறிந்த கல் பட்டு ஒரு கண்ணின் பார்வை பறிபோனது. “என்னால் வேறு வேலை செய்ய முடியாதென்பதால், என் மனைவியின் இஸ்திரி வேலையில் உதவி செய்கிறேன்,” என்கிறார் அவர். “ஒரு நாளில் நான்கு மணி நேரம் நின்று இஸ்திரி போடுவதால் கால்கள் வலிக்கின்றன.”
சந்தோஷ்ஷும் சமிதாவும் 15 வருடங்களாக இஸ்திரி தொழில் செய்கிறார்கள். “அவருக்கு நேர்ந்த விபத்துக்கு பிறகு, சாப்பாட்டுக்கும் எங்கள் இரு மகன்களின் படிப்பு செலவுக்குமென நான் வேலை பார்க்கத் தொடங்கினேன்,” என்கிறார் சமிதா. “ஆனால் இந்த ஊரடங்கு எங்களுக்கு ரொம்ப கொடுமையாக இருக்கிறது.” கடந்த சில வாரங்களாக கையிலிருந்து சேமிப்பை செலவழித்தார்கள். பிறகு காய்கறிகள் வாங்கவும் மாதாமாதம் வரும் மின்சாரக் கட்டணமான 900 ரூபாய் கட்டவும் உறவினர்களிடம் 4000 ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்கள்.






