அறுபது அடி உயர மரத்தில் ஏறி தேன் சேகரிப்பதற்கும், அடர்ந்த முதுமலை காட்டில் காட்டு யானைகளுக்கு மத்தியில் வேலை செய்வதற்கும், வனப்பகுதியில் சுமார் 65 புலிகளுடன் வேட்டையாடுவதற்கும், எது தேவைப்படும் என்று எம்.மதனுக்குத் தெரியும்.
இவை எதுவுமே அவரை பயமுறுத்தியது கிடையாது. நாங்கள் அவரிடம் நீங்கள் எத்தனை புலிகளை மிக அருகில் சென்று பார்த்து இருக்கிறீர்கள் என்று கேட்டால்: அவர் சிரித்துக்கொண்டே "நான் எண்ணுவதையே நிறுத்திவிட்டேன்!" என்று கூறுகிறார்.
ஆனால் வேறொரு வகையான மறைந்திருக்கும் ஆபத்து ஒன்று அவரை இப்போது கலக்கமடையச் செய்கிறது. முதுமலை புலிகள் காப்பகத்தின் இடை மண்டலத்தில் இருக்கும் ஏழு குக்கிராமங்களில் சுமார் 90 குடும்பங்களில் ஒன்றான மதன் மற்றும் பென்னியைச் சேர்ந்த பிற குடியிருப்பாளர்களும் விரைவில் தங்களது பரம்பரை வீடுகளையும் நிலத்தையும் விட்டு வெளியேற வேண்டியிருக்கும்.
மதன் காட்டில் இருக்கும் தனது வீட்டை காண்பிக்கிறார். அவரது குடும்பத்தின் குடிசை வீட்டின் அருகிலேயே மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது அதன் அருகில் அதிகமாக மரங்கள் செரிந்து இருக்கும் இடத்தின் அடியில் தான் பல தலைமுறைகளாக வாழ்ந்து மடிந்த அவர்களின் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளத்தாக்கில் உள்ள நீரோடை மற்றும் அதன் அருகில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான காய்கறிகள் விளைவிக்கப்படும் இடம் முள் புதரால் விலங்குகளிடமிருந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். "இதுவே எங்கள் வீடு", என்று அவர் கூறுகிறார்.


