வங்கி (உங்களிடமிருந்து) கடனைத் திரும்பப் பெற காந்திய வழியில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, கீழ்கண்டவற்றுள் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது: 1)வீட்டின் வாசலின் எதிரில் போராட்டம் நடத்துவதற்காக முகாம் அமைக்க உள்ளது, 2)பேண்ட் வாத்தியக் கருவிகளை உபயோக்கிக்க உள்ளது. 3)மணியை ஒலிக்கச் செய்யவுள்ளது.
“இந்த நடவடிக்கைகளின் காரணமாக, தங்களின் அந்தஸ்து மற்றும் கௌரவத்திற்கு களங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது”
இவ்வாறான வகையில் ஒஸ்மனாபாத் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி (ODCC) அதன் 20,000 வாடிக்கையாளர்களை பொதுவெளியில் அவமானப்படுத்தும் வகையிலும் பரிகசிக்கும் விதமாகவும் கூறியுள்ளது. இவ்வங்கியின் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் பல ஆண்டுகளாக துன்பத்திற்கு ஆளாகி வரும் விவசாயிகளே ஆவர். சிலசமயம் போதிய விளைச்சல் இல்லாததாலும், சிலசமயம் அதிகப்படியான விளைச்சல் இருப்பினும் விலை சரிவாலும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும்,விவசாயத்தை முடக்கிப் போடும் அளவிலான வறட்சி மற்றும் நீர் பிரச்சினைகள் காரணமாக அவர்கள் கடனைத் திருப்பி செலுத்துவது மேலும் சிக்கலாகியுள்ளது. இவற்றிற்கு எல்லாம் மேலாக, 500 மற்றும் 1,000 ஆயிரம் ருபாய் தாள்களை மதிப்பிழக்க செய்த அரசின் உத்தரவானது, விவசாயிகளிடம் பணிபுரிந்த விவசாயத்தொழிலாளிகளின் தினக்கூலியைக்கூட செலுத்த இயலாத நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. கேஹெட் கிராமத்தைச் சார்ந்த குறுவிவசாயியான எஸ்.எம்.கவலே கூறுகையில், "கடந்த நவம்பர் 9 ஆம் தேதியிலிருந்து விவசாயக் கூலிகளுக்கு ஒரு பைசா கூட ஊதியமாக வழங்கப்படவில்லை. அனைவரும் பசியோடுதான் இருந்தார்கள்" என்றார்.
மேலும், வங்கியின் கடிதத்தில் (கடிதத்தின் மொழிபெயர்ப்பானது கட்டுரையின் முடிவில் இடம்பெற்றுள்ளது) அதன் முதலீட்டாளர்கள் பணம் எடுக்க முடியவில்லை என்றால் அதற்கு விவசாயிகள் தான் காரணம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது:"இதுபோன்ற காரணங்களினால் ஒருவேளை முதலீட்டாளர் தற்கொலை செய்து கொண்டால், அதற்கு நீங்கள் தான் பொறுப்பு..."
இந்த சூழலில் தான்,அந்தக் கிராமத்திற்கு வருகைப்புரிந்த வங்கியின் 'கடன் மீட்புக் குழுவானது' விவசாயிகளின் குடும்பத்தை அச்சுறுத்தியுள்ளது. இதன் காரணமாக அவர்களுக்கு பதற்றமும் விரக்தியும் ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பகுதியில் உள்ள, தெர்னா மற்றும் துல்ஜபவானி ஆகிய இரண்டு சர்க்கரை ஆலைகள் ஓ.டி.சி.சி வங்கியிலிருந்து ஒட்டுமொத்தமாக 352 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ள நிலையில், அந்தக் கிராமத்தைச் சார்ந்த ஏறத்தாழ 20,000 விவசாயிகள் அந்த வங்கியிடமிருந்து ஒட்டுமொத்தமாக வெறும் 180 கோடி ரூபாய் மட்டுமே கடன் பெற்றுள்ளனர். எனினும், சிறுவிவசாயிகள் பெற்றக் கடனைத் திரும்ப பெற வங்கி மேற்கொண்டயுத்திகள், அதிகாரமிக்கவர்களால் கட்டுப்படுத்தப்படும் பெரும் நிறுவனங்களுக்கு என்று வரும் வரும்போது மட்டும் சாதகமாக காற்றில் பறந்துள்ளது. "அந்த நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது" என்று ஓ.டி.சி.சி வங்கியின் நிர்வாக இயக்குனர் விஜய் கோன்சே பாட்டில் தெரிவித்துள்ளார். எனவே, அங்கு கடனைக் கைப்பற்றுவதற்கான காந்திய வழியிலான எந்தப்போராட்டமும் நடைபெறவில்லை. மேலும், இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்கள் கைப்பற்றப்பட்டு வங்கியால் ஏலமும் விடப்படவில்லை.
"காந்திய வழியிலான போராட்டம் நடத்துவதற்கான இந்த திட்டம் திரு.அருண் ஜேட்லீயின் பேச்சினால் ஈர்க்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது" என்று கோன்சே பாட்டில் தெரிவித்துள்ளார். இவர் தான் அந்தக்கிராம மக்களை கோபம் கொள்ளச் செய்த அந்தக் கடிதத்தினை எழுதியவர். ஒஸ்மானாபாத் நகரில் உள்ள வங்கியின் தலைமையகத்தில் இதுகுறித்து அவரிடம் பேசிய போது: "நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கடன் நிலுவைதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கும் வகையில் பேசிய ஒன்றிய நிதியமைச்சர் பேச்சின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது" என்று தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்துவது போன்று பேசினார்


