“சப் மச் சேஸ் (எலலா மீனும் போச்சு)” என்று துண்டு துண்டாக வங்காள மொழியில் பேசுகிறார் முரளி. சிரித்துக்கொண்டுதான் பேசுகிறார். ஆனாலும் அந்தச் சிரிப்பில் வேதனை கலந்திருக்கிறது. “சோப் கிச்சு டிப்ரெண்ட் (எல்லாம் மாறிப்போச்சு)” என்றும் சொல்கிறார். ஜல்தா கிராமம் பக்கத்தில் இருக்கிற ராம்நகர் மீன் மார்க்கெட்டில்தான் நாங்கள் இரண்டு வருஷம் முன்னால் சந்தித்தோம். வங்காள விரிகுடா கடலில் உள்ள மீன்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன என்பதை முரளி அறிந்திருக்கிறார்.
அவர் நடுக்கடலில் இருக்கிற ‘காலொ ஜோன்’ (காலனின் மண்டலம்) பற்றி பேசுகிறார். இந்தப் பெருங்கடலில் ஏறத்தாழ 60 ஆயிரம் சதுரகிலோமீட்டர்களுக்கு ஒரு ‘ மரண மண்டலம்’ பரவிக்கிடக்கிறது அது வளர்ந்தும் வருகிறது என்று 2017ஆம் ஆண்டில் விஞ்ஞானிகள் அறிவித்தார்கள். அந்தப் பகுதியில் ரொம்பக் கொஞ்சமாகத்தான் ஆக்ஸிஜன் இருக்கிறது. நைட்ரஜன் குறைந்துவிட்டது. அதுமட்டும் அல்ல, கடல்சார் உயிரினங்களே ஏறத்தாழ இல்லை என்ற அளவுக்குப் போய்விட்டது. கடலில் இயல்பாக ஏற்படுகிற மாற்றங்கள், மனிதர்கள் கடலில் செய்கிற செயல்பாடுகள் ஆகியவற்றின் விளைவுதான் இத்தகைய நிலைமை என்கின்றன இதுபற்றிய ஆய்வறிக்கைகள்.
முரளியின் அப்பா பெயர் எனக்குத் தெரியவில்லை. அவர் பெஸ்தா மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கோவிந்தப் பாளையம் எனும் கிராமத்தில் வளர்ந்தவர். அக்டோபர் - மார்ச் மீன் பருவக் காலத்தில் வங்கக் கடலோரத்தில் உள்ள மாவட்டமான புர்பா மித்னாப்பூரின் ஜால்தா கிராமத்துக்கு அவர் கடந்த 20 வருடங்களாக வந்துபோகிறார். இத்தனை வருடங்களில் அவர் கொஞ்சம் வங்க மொழி கற்றுள்ளார். அதை இந்தியோடு கலந்து பேசுகிறார். அவரது பேச்சில் கொஞ்சம் ஆங்கிலமும் கலந்திருக்கிறது.
இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளின் கடலோரங்களில் உள்ள துறைமுகங்களில் நிறைய நண்பர்களையும் குடும்ப உறவினர்களையும் கொண்டிருப்பதில் முரளிக்கு பெருமிதம். “ யாழ்ப்பாணம் முதலாக ஜம்புத் தீவு வரை எல்லாருமே ஒரு குடும்பம்தான்” என்று கொண்டாட்டமாக ஜம்பம் அடிப்பார் அவர். ஜம்புத் தீவு என்பது வங்கக் கடலில் உள்ள ஒரு தீவு. எல்லா விவரங்களையும் அவர் எனக்குச் சொல்ல மாட்டார் ஆனால் அவரது நண்பர் ஸ்வபன் தாஸை எனக்கு அறிமுகப்படுத்தினார். “ ஐ அமார் பாய் (இவர் எனது சகோதரர்)” அவருக்கு 40 வயது இருக்கும்.





