சிராஜ் மோமின் ஒரு பிழை கூட செய்ய முடியாது. ஒரே ஒரு பிழை செய்தாலும், அவர் ஒரு மீட்டர் துணிக்கு பெரும் 28 ரூபாயை அவர் இழக்க நேரிடும். அவர் நீளவாக்கில் உள்ள நூல் இழைகள் மற்றும் ஊடு இழை நூல்களின் எண்ணிக்கையைத் துல்லியமாக பராமரிக்க வேண்டும். அதனால் அவர் நெசவினை ஆய்வு செய்ய இப்போது ஒரு பூதக் கண்ணாடியைப் பயன்படுத்தி அதன் வழியாகப் பார்க்கிறார். மேலும் இந்த ஆறு மணி நேரத்தில் கைத்தறியின் இரண்டு பெடல்களையும் அவர் ஒரு நிமிடத்திற்கு 90 முறை மிதிக்கிறார் - அதாவது ஒரு நாளுக்கு 32,400 முறை. அவரது கால் அசைவுகள் 3,500 (இந்த எண்ணிக்கை ஒவ்வொரு இயந்திரதிற்கு இயந்திரம் மாறுபடும்) கம்பிகள் அல்லது பாவு நூல் செலுத்திகளுடன் கூடிய செவ்வக சட்டகத்தை அது மூடி மூடி திறக்கிறது. உலோகக் கற்றையின் மீது சுற்றப்பட்ட நீளவாக்கு நூல் இழை இந்த கம்பிகளின் வழியே செல்லும் போது அவரது பாதம் சீராக அசைந்து கொண்டிருக்கிறது. இந்த செய்கையில் இருந்து ஒரு அங்குலத்திற்கு 80 நீளவாக்கு நூல் இழைகள் மற்றும் 80 ஊடு இழை நூல்கள் கொண்ட ஒரு மீட்டர் துணி - ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தயாரிக்கப்படுகிறது.
இப்போது 72 வயதாகும் சிராஜ் தனது 15 வயதில் இருந்தே, அரை நூற்றாண்டுக்கும் மேலாக இத் தொழிலைச் செய்து வருகிறார். அவரது கைத்தறி கிட்டத்தட்ட அவரை விட இரு மடங்கு பழமையானது, அது ஒரு நூற்றாண்டு பழமையான தேக்கு மரத்தால் செய்யப்பட்ட ஒரு குடும்ப குலதனம். அதில், 57 ஆண்டுகளாக, சிராஜ் துணிகளை வடிவமைத்து வந்துள்ளார் - கைத்தறிக்கு, ஒரே நேரத்தில் நுட்பமாக சோதிப்பதற்கும், ஒருங்கிணைந்த கை கால் அசைவுகளுக்கும், துணிக்குத் தேவையான நீளவாக்கு நூல் இழைகள் மற்றும் ஊடு இழை நூல்கள் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கும் இவரை போன்ற திறமையான ஒரு நெசவாளரே தேவைப்படுகிறார்.
ஏறக்குறைய ஏழு அடி உயரமுள்ள இரண்டு கைத்தறிகள் மட்டுமே இப்போது சிராஜின் வீட்டில் இருக்கிறது. இதற்கு முன்னால் அவர் ஏழு கைத்தறிகள் வைத்திருந்து இருக்கிறார் மேலும் அவற்றை இயக்க தொழிலாளர்கள் சிலரை கூட வேலைக்கு வைத்து இருந்திருக்கிறார். "1980 களின் பிற்பகுதி வரை எங்களுக்கு நிறைய வேலைகள் கிடைத்தன", என்று அவர் கூறுகிறார். மூன்று தசாப்தங்களுக்கு முன்பு, அவர் தனது மூன்று தறிகளை மற்ற கிராமத்திலிருந்து வந்த வாங்குபவர்களிடம் தலா 1,000 ரூபாய்க்கு விற்றுவிட்டார் மேலும் சிறிது காலத்திற்குப் பிறகு கோல்ஹாபூர் நகரத்தில் உள்ள ஒரு அரசு சாரா நிறுவனத்திற்கு மற்ற இரண்டு கைத்தறிகளை நன்கொடையாக வழங்கிவிட்டார்.
கோல்ஹாபூர் மாவட்டத்தின் ஹட்கானங்கள் தாலுகாவில் உள்ள அவரது கிராமமான ரெண்டலில் (2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி) 19,674 பேர் வசித்து வருகின்றனர், சிராஜின் குடும்பத்தில் மூன்று தலைமுறைகளாக கைத்தறியில் அமர்ந்து துணிகளை நெய்து கொண்டு இருக்கின்றனர். 1962 ஆம் ஆண்டில் 8 ஆம் வகுப்பு முடித்த பிறகு, சிராஜும் தனது தந்தையின் சகோதரியான ஹலீமாவிடமிருந்து கைத்தறி நெசவு செய்யும் கலையைக் கற்றுக் கொண்டார். ரெண்டலில் இருந்த ஒரு சில பெண் நெசவாளர்களுள் அவரும் ஒருவராக இருந்திருக்கிறார். அந்த கிராமத்தில் இருந்த மற்ற பெண்கள் எல்லோரும் ஊடு இழைக்கான நூல்களை நூற்தனர், பின்னர் பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களைப் போலவே சிராஜின் மனைவியும் அதையே செய்தார்.















