முகமது ஹஸ்னன், டெல்லியில் தொழிலாளராக பணியாற்றுகிறார். கட்டிட வேலை, சுமை தூக்குவது என கடந்த 25 வருடங்களாக கிடைத்த வேலையை செய்துக் கொண்டிருக்கிறார். நகரின் வடகிழக்கில் உள்ள ரமிலா மைதானில் கூடாரம் அமைக்கும் பணியைப் பார்வையிட்ட படியே, இன்று எல்லாம் மாறிவிட்டது எனக் கூறுகிறார். நவம்பர் 28 இரவு முதல் இங்கு விவசாயிகள் வரத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 29 மற்றும் 30ம் தேதி நடைபெறவுள்ள கிசான் முக்தி மோர்ச்சாவில் கலந்துகொள்ள நாடெங்கிலும் இருந்து விவசாயிகள் வருகை தர உள்ளார்கள்.
“நானும் விவசாயிதான். எங்கள் நிலத்தில் போதுமான விளைச்சல் இல்லாததால் நானும் வேறு வழியின்றி உத்தரபிரதேசத்திலுள்ள மொராதாபாத்திலிருந்து இங்கு புலம்பெயர்ந்துள்ளேன். நாளை மிகப்பெரிய பேரணியைப் பார்க்கலாம் என நம்புகிறேன். மொரதாபாத்தைச் சேர்ந்த சில விவசாயிகளை சந்திக்கலாம் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நாங்கள் பல காலமாக புறக்கணிக்கப்பட்டு வருகிறோம்.”
நவம்பர் 28, புதன்கிழமை காலையிலிருந்து 65-70 தொழிலாளர்கள் ரமிலா மைதானில் வேலை செய்து வருகிறார்கள். கூடாரத்திற்குச் சற்று தொலைவிலேயே 6-8 பேர் மும்முரமாக உருளைக்கிழங்கை உறித்துக் கொண்டும் பெரிய பாத்திரத்தில் பால் காய்த்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது அருகிலுள்ள ஹல்வாயில் வேலை பார்க்கும் மத்திய பிரதேசத்தின் போர்சா கிராமத்தைச் சேர்ந்த ஹரிஷ்சந்திர சிங், 35, இந்த வேலைகளை மேற்பார்வை செய்துக் கொண்டிருக்கிறார். “குறைந்தது 25,000 பேருக்காவது (இன்றிரவு மைதானில் தங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது) டீயும் சமோசாவும் நாங்கள் தயார் செய்ய வேண்டும்” என அவர் கூறுகிறார்.





