தெற்கு கொல்கத்தா பகுதியில் உள்ள ஜாதவ்பூர் ரயில்வே நிலையத்தில் ரயிலுக்காகக் கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்த பரேஷ்பதி சர்தார் “இன்று ரயிலுக்குள் அமர்வதற்கு இடம் இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறாயா?’ என்று சத்தமாகக் கேட்டார். அவர் அருகில் நின்றுக்கொண்டிருந்த பெண், அவநம்பிக்கையுடன் தலையசைத்து அந்தக் கேள்வியைக் கேட்டு சிரித்தார்.
மாலை 4:35 மணியளவில் கன்னிங் பகுதிக்குச் செல்லக் கூடிய ரயிலுக்காகக் காத்திருநத்தார் பிரேஷ்பதி. அந்த ரயில் ஜாதவ்பூர் ரயில்வே நிலையத்திற்குள் வேகமாக வருகிறது. அந்தப் பெண் அடித்து பிடித்து அந்தக் கூட்டத்திற்குள் புகுந்து, நிரம்பி வழியும் இரண்டு பெண்கள் ரயில்பெட்டிகளில் ஒன்றில் நுழையமுற்படுகிறார்.
அந்த ரயில் வடக்கு கொல்கத்தாவின் சீல்டாப் பகுதியில் இருந்து வருகிறது. இது பார்க் சர்க்கஸ், பல்லிகுஞ், தகுரியா ஆகிய ரயில்வே சந்திப்புகளை தாண்டி ஜாதவ்பூர் சந்திப்பிற்கு வருகிறது. இந்த ரயில் பெரும்பான்மையாக நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கக்கூடிய பாகா ஜடின், நியூ கேரியா மற்றும் கேரியா ஆகிய பகுதிகளில் நின்றுவிட்டு இங்கு வருகிறது. ஜாதவ்பூர் ரயில்வே சந்திப்பில் பெண்கள் காத்திருப்பதை போன்றே, தெற்கு கொல்கத்தாவை சுற்றியுள்ள ஊர்களில் பணிபுரியக்கூடியப் பெண்கள் இந்த வழித்தடத்தில் உள்ள ரயில் சந்திப்புகளில் ரயிலுக்காகக் காத்திருகின்றனர்.
பெரும்பாலானோர்கள் 45 கிலோமீட்டர் தொலைவு பயணிக்கும் சீல்டா-கன்னிங் வழித்தடத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த ரயில் 16 சந்திப்புகளைக் கடந்து வருகிறது. இதேபோன்று, சீல்டா-லக்ஷ்மிகண்டப்பூர் ரயில் 65 கிலோமீட்டர் தொலைவு பயணித்து 25 சந்திப்புகளைக் கடந்து வருகிறது அல்லது சீல்டா-நம்க்கனா ரயில் தெற்கு நோக்கி சிறிது தூரம் செல்கிறது. எனவே, கிழக்கு ரயில்வேயின் ரயில்களை கொல்கத்தா பகுதியில் சிலர் ‘ஜி சிறப்பு ரயில்’ என்று கூறுகின்றனர். ஜி என்பது பெங்காலியில் வீட்டுவேலைப் பார்க்கக்கூடிய பெண்களை இழிந்துரைக்கக்கூடிய சொல்லாகும்.









