இரண்டாவது பிரசவத்திற்காக 2020 ஆகஸ்ட் மாதம் அஞ்சனி யாதவ் பெற்றோர் வீட்டிற்கு வந்தார். அப்போது முதல் கணவர் வீட்டிற்கு அவர் திரும்பவில்லை. 31 வயதாகும் அஞ்சனி இரண்டு குழந்தைகளுடன் பீகாரின் கயா மாவட்டம் புத்தகயா வட்டாரம், பக்ரார் கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் வசிக்கிறார். அரை மணி நேரத்தில் செல்லக்கூடிய அவரது கணவரின் கிராமப் பெயரைக் கூட அவர் சொல்ல விரும்பவில்லை.
“அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்த இரண்டு நாட்களில், வீட்டை சுத்தப்படுத்தி, சமையல் செய்யுமாறு என் பாபி [கணவரின் அண்ணி] கூறினார். பிரசவம் முடிந்து வந்தவுடன் வீட்டு வேலைகளை, தான் தொடங்கிவிட்டதாக அவர் என்னிடம் கூறினார். என்னைவிட அவர் 10 வயது மூத்தவர். பிரசவத்தின்போது எனக்கு அதிகளவில் உதிரப்போக்கு ஏற்பட்டது. பிரசவத்திற்கு முன்பே எனக்கு இரத்தசோகை இருப்பதால் நிறைய பழங்கள், காய்கனிகளை செவிலியர் உண்ணச் சொன்னார். கணவர் வீட்டில் இருந்திருந்தால் என் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும்.”
தேசிய குடும்ப நல கணக்கெடுப்பின் சமீபத்திய அறிக்கையின்படி (NFHS-5), பல மாநிலங்களிலும், யூனியன் பிரதேங்களிலும் கடந்த ஐந்தாண்டுகளில் குழந்தைகள், பெண்களுக்கு இரத்த சோகை அதிகரித்துள்ளது என்கிறது.
குஜராத்தின் சூரத்தில் உள்ள துணி உற்பத்தி ஆலையில் அஞ்சனியின் 32 வயது கணவர் சுகிராமும் வேலை செய்கிறார். அவரால் ஒன்றரை ஆண்டுகளாக வீட்டிற்கு வர முடியவில்லை. “எனது பிரசவத்திற்கு வருவதாக இருந்தது. ஆனால் இரண்டு நாட்களுக்கு மேல் விடுப்பு எடுத்தால் நிறுவனத்தில் அவரை நீக்கி விடுவார்கள். கரோனா காய்ச்சலுக்குப் பிறகு பொருளாதாரமாக, உணர்வுப்பூர்வமாக, உடல்நலமாக நிலைமை மோசமடைந்துள்ளது. எனவே அனைத்தையும் நான் தனியாக சமாளித்து வருகிறேன்.”
“அவர் இல்லாதபோது ஏற்படும் மோசமான சூழலில் இருந்து நான் தப்பிக்க நினைத்தேன். பிரசவத்திற்குப் பிறகு குழந்தையை பார்த்து கொள்ளவும், அன்றாட பணிகளில் எனக்கு உதவவும் யாரும் முன்வரவில்லை,” என்று அவர் பாரியிடம் சொன்னார். இம்மாநிலத்தில் லட்சக்கணக்கான பெண்களைப் போலவே அஞ்சனி யாதவும் உயர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பீகாரில் சுமார் 64 சதவீத பெண்கள் இரத்த சோகையில் உள்ளனர் என்கிறது NFHS-5 அறிக்கை.
“குழந்தைப் பெறும் வயதில் உள்ள பெண்களிடம் நிலவும் இரத்த சோகையை குறைக்கும் எந்த முயற்சியையும் இந்தியா இலக்காகக் கொள்ளவில்லை, 15 முதல் 49 வயதிலான 51.4 சதவீதம் பெண்கள் இப்போது பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்கிறது கோவிட்-19 குறித்த 2020 உலக ஊட்டச்சத்து அறிக்கை.








