அன்று இரவு மீனா தூங்கவில்லை. மழை நீரெல்லாம் அவர் வீட்டிற்குள் நுழைந்துவிட்டது. பெருமழையை தாங்க முடியாமல் நிமிடங்களில் தார்ப்பாய் கீழே விழுந்துவிட்டது. உடனடியாக மீனாவும் அவரது குடும்பமும் அருலிலுள்ள மூடப்பட்ட கடை முன்னால் தஞ்சம் அடைந்தனர்.
மழை நிற்கும் வரை இரவு (ஜூன் மாத ஆரம்பத்தில்) முழுவதும் நாங்கள் அங்கேயே இருந்தோம் எனக் கூறும் மீனா, நெடுஞ்சாலையின் ஓரத்தில் அச்சிடப்பட்ட தாளை விரித்து அதில் அமர்ந்திருக்கிறார். அவரது இரண்டு வயது மகள் ஷாமா, அருகில் தூங்கிக் கொண்டிருக்கிறார்.
மழை நின்றதும், திரும்பி வந்த மீனா தனது வசிப்பிடத்தை சரி செய்தார். ஆனால் அதற்குள் அவரது பெரும்பாலான உடமைகள் – பாத்திரங்கள், தாணியங்கள், பாடப்புத்தகங்கள் - மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
“எங்களிடம் இருந்த முகக்கவசமும் தண்ணீரில் சென்று விட்டது” என்கிறார் மீனா. ஊரடங்கின் ஆரம்பக் கட்டத்தில் தன்னார்வலர்கள் இவர்களுக்கு துணியிலான பச்சை நிற முகக்கவசத்தை கொடுத்திருந்தனர். “நாங்கள் முகக்கவசம் அணிந்தால் மட்டும் என்ன ஆகப்போகிறது? ஏற்கனவே நாங்கள் இறந்தவர்கள் போல்தான் உள்ளோம். அதனால் எங்களுக்கு கொரோனா வந்தால் யார் கவலைப்பட போகிறார்கள்?”
மீனாவும் (தன்னுடைய முதல் பெயரை மட்டுமே பயன்படுத்துகிறார்) அவரது குடும்பமும் – கனவர் மற்றும் நான்கு குழந்தைகள் – இந்த பருவமழை தொடங்கியதிலிருந்து தங்களிடமிருந்த கொஞ்ச உடமைகளும் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவதை பார்த்து வருகின்றனர். இந்தப் பருவமழை தொடங்கியதிலிருந்து இப்படி நடப்பது இரண்டாவது முறை. ஒவ்வொரு வருடமும் இது தொடர்கதையாக உள்ளது. வடக்கு மும்பையின் கிழக்கு கண்டிவெளி புறநகர்ப் பகுதியில் உள்ள நடைபாதையில் இருக்கும்
ஆனால் போன வருடம் வரை, அதிகமாக மழை பெய்யும்போது அருகிலுள்ள கட்டுமான தளங்களில் தஞ்சம் அடைவார்கள். இப்போது அதுவும் நின்றுவிட்டது. 30 வயது போல இருக்கும் மீனா கூறுகையில், “இந்த மழைக்கு நாங்கள் பழக்கப்பட்டு விட்டோம். ஆனால் இந்த முறை கொரோனா வந்து எங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி விட்டது. முன்பு அந்தக் கட்டிடங்களுக்கு சென்று காத்திருப்போம். காவலாளிகளுக்கும் எங்களைத் தெரியும். மதிய நேரத்தில் கடைக்காரர்கள் கூட எங்களை வெளியே உட்கார அனுமதிப்பார்கள். ஆனால் இப்போதோ அருகில் நடக்க கூட எங்களை அவர்கள் விடுவதில்லை.”













