"என் வாழ்நாளில் இந்த ஆறு இவ்வளவு சீற்றம் கொண்டு நான் பார்த்ததே இல்லை", என்கிறார் 55 வயதான சக்குபாய் வாக்ஃ. ஆகஸ்ட் 4 ஆம் தேதி அன்று, காலை 10 மணி அளவில், அவரும்அவரது 20 வயது மகன் மனோஜும் அவர்களது வீட்டில் இருந்தார்கள். "வெளியே பலத்த மழை பெய்து கொண்டிருந்தது", என்று அவர் நினைவு கூர்கிறார். "திடீரென்று ஒரு பெரிய அலை எங்கள் குடிசைக்குள் புகுந்தது. நாங்கள் சிறிது நேரம் கழுத்தளவு தண்ணீரில், ஒருவரின் கையை மற்றொருவர் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தோம். கண் இமைக்கும் நேரத்தில், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில், நான் கவனமாய் சேர்த்து வைத்திருந்த அனைத்தையும் ஒரே நொடியில் தண்ணீர் அடித்து சென்று விட்டது", என்கிறார் அவர்.
திகிலூட்டும் அந்த 20 நிமிடங்களுக்குப் பிறகு சக்குபாய் மற்றும் மனோஜால் அருகிலுள்ள உயரமான இடத்திற்கு செல்ல முடிந்தது. அங்கிருந்து அவர்கள் இந்த அழிவை பார்த்தார்கள். அன்று காலை, மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்திலுள்ள வடா தாலுகாவின் கேட்ஸ் கே கிராமத்தில், வைதர்ணா ஆற்றிலிருந்து வந்த நீர் இவர்களது குடிசையுடன் மற்ற 24 குடிசைகளையும் அடித்துச் சென்றது. பல மணி நேரங்களுக்கு பிறகு மாலையே தண்ணீரின் அளவு குறைய துவங்கியது.
"இங்கே பாருங்கள், இதுதான் எனது உலகம்", என்று ஆற்றின் கரையில் இடிந்து கிடக்கும் குடிசையை சுட்டிக்காட்டி கூறுகிறார் சக்குபாய். அந்தச் சேற்று நிலத்தில், உடைந்த ஓடுகள் ஒன்றின் மேல் ஒன்றாக கிடக்கின்றன, எஞ்சிய மூங்கில் கூரைகளும், சுவர்களும் கிடைக்கின்றன, மேலும் கந்தலான தார்பாய்களும் கிடைக்கின்றன. சேற்றில் பல நாட்களாக கிடந்து அழுகிய அரிசி, வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கின் நாற்றம் அங்கேயே ஒரு மேகம் போல் சுற்றிக்கொண்டிருக்கிறது. "இந்த நாற்றத்தை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை, எனக்கு குமட்டல் வருகிறது", என்கிறார் சக்குபாய்.











