ஆந்திரா மற்றும் தெலெங்கானாவின் மிளகாய் அறுவடை செய்யும் வேலைகளுக்கு அருகாமை மாநிலங்களான சட்டீஸ்கர் மற்றும் ஒடிசா ஆகியவற்றிலிருந்து இளையத் தொழிலாளர்கள் பலர் வருகின்றனர். ஊதியத்துக்காக அவர்கள் வரவில்லை. வருடம் முழுவதுக்குமான மிளகாய்களை வீட்டுக்குக் கொண்டு செல்ல வருகின்றனர். காரம் நிறைந்த காயைப் பெறும் ஆர்வம், சிறுவர்களும் சிறுமிகளும் தங்களின் பள்ளிப் படிப்பை விட்டுக் கூட வேலைக்கு வருமளவுக்கு இருக்கிறது. அன்றாடப் பயன்பாட்டுக்கான மிளகாயின் வருடத் தேவையை அவர்கள் அடைய இது ஒன்றே வழியாக இருக்கிறது.
குழந்தைகள் குறைவான மிளகாய்களையே எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் குடும்பத்தில் இருக்கும் வளர்ந்தவர்களுக்கு அது அன்றாட உணவுப் பொருளாக இருக்கிறது. ஆனால் இங்கிருக்கும் தொழிலாளர்களில் குழந்தைகள்தான் முன்னணியில் இருக்கின்றனர். பாதியளவுக்கேனும் எண்ணிக்கையில் அவர்கள் இருக்கின்றனர். அடுத்த அறுவடை வரைக்கும் தேவையான விலைமதிப்பற்ற மிளகாய்களை அவர்கள் பெற்று விடுகிறார்கள். 120 ரூபாய் நாட்கூலிக்கு பதிலாக மிளகாய்களைப் பெறவே அவர்கள் விரும்புகின்றனர். சில குடும்பங்கள் பாதி அல்லது ஒரு முழு குவிண்டால் மிளகாய்கள் கூட பெறுமளவுக்கு வேலை பார்க்கின்றனர். ஒரு கிலோ 100 ரூபாய் என்ற கணக்கில் பார்த்தால், ஒரு குவிண்டால் 10,000 ரூபாய் மதிப்பு பெறும்.
இது விலை உயர்ந்த வருமானம். குடும்பங்களின் பொருளாதாரத்துக்கு சரியாக இருக்கிறது. ஒரு வருடத்தில் ஒரு குடும்பம் 12-20 கிலோ மிளகாய்களை உட்கொள்ளும். மிச்சமுள்ளவை சந்தையில் விற்கப்பட்டு உபரி வருமானம் கிடைக்கிறது. ஒரு வருடத்துக்கான, நிலத்தில் நேரடியாக பறிக்கப்பட்ட, சிறந்த மிளகாய்கள் வீட்டிலிருப்பது உறுதிபடுத்தப்படுகிறது.
“எங்கள் கிராமத்திலிருந்து 20 பேர் வந்திருக்கிறோம். மூன்று வாரங்கள் இங்கு தங்குவோம்,” என்கிறார் குடுமுடா கிராமத்தைச் சேர்ந்த உமாஷங்கர் பொடியாமி. “இந்தக் குழுவில் இருக்கும் அனைவரும் பணத்துக்கு பதிலாக மிளகாய்கள் பெறவே விரும்புகிறார்கள்.”





