தாயின் வருகைக்காக வீட்டு வாசலில் போடப்பட்டிருக்கும் கட்டிலில் காத்திருக்கிறார் 40 வயதாகும் மலன். அப்பெண் பூப்போட்ட சட்டையும், முழங்கால் வரையிலான பாவாடையும் அணிந்திருக்கிறார். என்னை கண்டதும் அவரது முகம் ஒளிர்கிறது. ஏற்கனவே என்னை பார்த்திருந்ததால் அவருக்கு அடையாளம் தெரிந்துவிட்டது. “அம்மா வீட்டில் இல்லை”, என்று அவர் சொன்னார். அப்போது செங்கல், கல், மண் கொண்டு கட்டப்பட்ட இரண்டு அறை கொண்ட அவளது வீட்டில் அமர்ந்தேன்.
மலன், வாடி கிராமத்தில் அவரது 63 வயது தாயான ரஹிபாய், 83 வயதாகும் தந்தை நானாவுடன் வசிக்கிறார். (அவர்களின் பெயர், கிராமத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளன.) புனே மாவட்டம் முல்ஷி தாலுக்காவில் உள்ளது இக்கிராமம். இங்கு இக்குடும்பம் நெல், கோதுமை, காய்கறிகளை வெறும் மூன்று ஏக்கர் நிலத்தில் பயிரிட்டு வருகிறது.
மலனுக்கு சுமார் 18 வயதாகும்போது புனேவில் உள்ள சாசோன் பொது மருத்துவமனையில் அவருக்கு ‘மனவளர்ச்சி குன்றியுள்ளது‘ கண்டறியப்பட்டது.
இதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூர் தொடக்கப் பள்ளியில் அவர் படித்தார். “அவள் வகுப்பில் எல்லோரும் 4ஆம் வகுப்பு முடித்துப் போய்விட்டனர். இவள் மட்டும் தரையில் கிறுக்கிக் கொண்டிருந்தாள்”, என்கிறார் ரஹிபாய். “கடைசியாக வகுப்பாசிரியர் அவளை பள்ளியிலிருந்து வெளியேறுமாறு கூறினார்.” அப்போது மலனுக்கு 15 வயது இருக்கும்.
அப்போதுமுதல், மலன் வீட்டில் தாய்க்கு சிறு சிறு உதவிகள் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் பிரமை பிடித்தது போல் இருப்பார். அவ்வப்போது பேசுவார். அப்படிப் பேசுவதும் ரஹிபாய் போன்ற சிலருடன் மட்டும்தான். ஆனால் அவரால் புரிந்துகொண்டு, தொடர்பு கொள்ள முடியும். நான் அவரிடம் பேசிய போது, தலையசைத்து, சிரித்து, கொஞ்சமாகப் பேசினார்.








