”எங்கள் வீட்டில் எலிகள் கூரைகளிலிருந்து விழுந்து செத்தது நினைவில் இருக்கிறது. வாழ்க்கையில் நான் பார்த்ததிலேயே மிக அச்சமூட்டும் காட்சி அதுதான். இப்போது அது சிரிப்புக்குரிய விஷயமாகத் தோன்றலாம், ஆனால் கூரையிலிருந்து ஒரு எலி விழுந்தால் நாங்கள் வீட்டை விட்டுப் போய்விட வேண்டும் என்று பொருள். எப்போது திரும்பி வருவோம் என்றுகூடத் தெரியாது.”
இவ்வளவு விரிவாக விவரிப்பவர் கோவையின் கலப்பட்டியில் வசிக்கும் ஏ. குழந்தையம்மாள். இவருக்குத் தற்போது 80 சொச்சம் வயதாகிறது. கடைசியாகக் கொள்ளை நோய் கோவையைத் தாக்கியபோது, அதாவது 1940களில், அவர் பதின்வயதுகளில் இருந்தார்.
பெரியம்மை தொடங்கி பிளேக், காலரா வரை கோவைக்கு ஒரு துயரமான கொள்ளை நோய் வரலாறு இருக்கிறது. இந்த வரலாற்றின் குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் வலுவடைந்திருக்கிறது. இது மற்ற இடங்களிலும் இருப்பதுதான் என்றாலும் கோவைப் பகுதியில் அதிகமாக இருப்பது போல் தெரிகிறது. ‘பிளேக் மாரியம்மன்’ (பிளாக் மாரியம்மன் எனவும் அழைக்கப்படுகிறது) கோவில்களின் பெருக்கம்தான் அது. கோவையில் மொத்தம் 16 கோவில்கள் இருக்கின்றன.
அதேபோல கோவிட் பெருந்தொற்றினால் ஒரு ’கொரோனா தேவி’ கோவிலும் வந்துவிட்டது. ஆனால் பிளேக் மாரியம்மன் கோவில்களுக்குதான் பக்தர்கள் மிக அதிகம். அருகே உள்ளே திருப்பூர் மாவட்டத்திலும் சில பிளேக் மாரியம்மன் கோவில்கள் இருக்கின்றன. அவையும் விழாக்களை நடத்தி மக்களை ஈர்க்கின்றன.
1903இலிருந்து 1942 வரை கோவையில் குறைந்தது 10 முறை பிளேக் நோய் வந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இறந்திருக்கின்றனர். இந்த நோய் மறைந்து பல பத்தாண்டுகள் ஆனபின்னும் நகரத்தின் கூட்டு நினைவில் இன்னும் பதிந்திருக்கிறது. குழந்தையம்மாள் போன்ற அந்தக் காலத்து ஆட்கள் பலருக்கு பிளேக் என்ற வார்த்தை, கோவை நகரத்தின் நோய்க்கால அச்சத்தை நினைவுக்குக் கொண்டுவந்துவிடுகிறது.
பரபரப்பான டவுன் ஹால் பகுதியின் மிகப் பிரபலமான பிளேக் மாரியம்மன் கோவில் என்று சொல்லத்தக்க கோவிலுக்கு வெளியே ஒரு பூக்கடைக்காரர் வியாபாரத்துக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார். “இன்று வெள்ளிக்கிழமை. நல்ல கூட்டம் இருக்கும்” என்கிறார் 40 சொச்சம் வயதாகும் கண்ணம்மா, பூக்கள் கோக்கும் கைகளிலிருந்து பார்வையை அகற்றாமல்.
“அவள் சக்தி வாய்ந்தவள் தெரியுமா? கொரொனா தேவி கோவில் இப்போது வந்திருக்கலாம். ஆனால் பிளாக் மாரியம்மன் எங்களில் ஒருத்தி. நாங்கள் அவளைத் தொடர்ந்து கும்பிடுகிறோம், குறிப்பாக எங்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது. பிற வேண்டுதல்களுக்கும் கும்பிடுகிறோம்.” ’பிற வேண்டுதல்கள்’ என்று பக்தர்களின் வழக்கமான வேண்டுதல்களான வசதி, வெற்றி, நீண்ட ஆயுள் ஆகியவற்றை அவர் குறிப்பிடுகிறார். பிளேக் காலம் முடிந்து கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்குப் பின்பு கண்ணம்மாள் பிறந்தார். ஆனாலும் அவர் தலைமுறையைச் சேர்ந்தோர்கூட உதவிக்கு மாரியம்மனையே நாடுகின்றனர்.












