கடைசியாக தந்தையுடன் கொண்ட உரையாடலை நினைத்து விஜய் மரொட்டர் வருந்துகிறார்.
அது ஒரு வறண்ட கோடைக்கால மாலை. யவத்மால் மாவட்டத்திலிருக்கும் அவர்களின் கிராமம் மெல்ல இரவுக்குள் நுழைந்து கொண்டிருந்தது. அப்பாவுக்கும் தனக்கும் அந்த வெளிச்சம் குறைவான குடிசைக்குள் அவர் இரு தட்டுகளை எடுத்து வைத்தார். இரண்டு ரொட்டிகளும் பருப்பும் ஒரு சோற்றுக் கிண்ணமும் இருந்தன.
அவரது தந்தையான கன்ஷியாம் தட்டைப் பார்த்ததும் கோபமடைந்தார். வெட்டப்பட்ட வெங்காயங்கள் எங்கே? அவரது கோபம் எல்லையை கடந்ததாக 25 வயது விஜய் கூறுகிறார். ”கொஞ்ச காலமாக அவர் தடுமாற்றத்தில்தான் இருந்தார்,” என்கிறார் அவர். “சிறு விஷயங்கள் கூட அவருக்கு கோபத்தை மூட்டின.” மகாராஷ்டிராவின் அக்புரி கிராமத்திலுள்ள ஓரறை குடிசைக்கு வெளியே இருக்கும் திறந்தவெளியில் ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் விஜய் அமர்ந்திருந்தார்.
சமையற்கட்டுக்கு சென்று அப்பாவுக்காக அவர் வெங்காயங்களை வெட்டி வந்தார். ஆனால் இனிமையற்ற ஒரு வாக்குவாதம் இருவருக்குமிடையே நடந்தது. அந்த இரவு கசப்பான ருசியுடன் விஜய் படுக்கைக்கு சென்றார். காலையில் அப்பாவிடம் பேசிக் கொள்ளலாம் என நினைத்தார்.
ஆனால் கன்ஷியாமுக்கு காலை புலரவில்லை.
59 வயது விவசாயி அந்த இரவே பூச்சிக்கொல்லி மருந்தை குடித்திருக்கிறார். விஜய் விழித்தெழுவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார். இது நடந்தது ஏப்ரல் 2022-ல்.









