“நாங்கள் குதிரைகளை எங்கள் குடும்ப உறுப்பினர்போலவே நடத்துவோம். நான் அதன் மருத்துவராகிவிடுவேன். தேவைப்படும்போது, அவற்றுக்கு மும்பையில் இருந்தும் மருந்துகள் வாங்கி வருவேன். அவை உடல் நலம் குன்றும்போது, நான் அவற்றுக்கு ஊசி போடுவேன். நான் அவற்றை குளிப்பாட்டி, சுத்தமாக வைத்திருப்பேன்“ என்று மனோஜ் கசுண்டே கூறுகிறார். அவர் தனது குதிரைகளை மிகவும் நேசிக்கிறார். உரிமம் பெற்ற குதிரையின் சொந்தக்காரர்களுள் மனோஜும் ஒருவர். குதிரையில் சுற்றுலாப்பயணிகளை ஏற்றிக்கொண்டு, அவற்றுடன் அதை பாராமரிப்பவர் அல்லது அதன் சொந்தக்காரர்கள் மத்தேரனின் மலைச்சரிவுகளில் மேலும் கீழும் அழைத்துச்செல்வார்கள். அதில் கிடைக்கும் வருமானமே அவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது.
கசுண்டேக்களின் உலகம் நமக்கு புலப்படாத ஒன்று. அரிதாகவே நாம் அது குறித்து நாம் விவரமாக தெரிந்துகொள்ள முடிகிறது. ஏனெனில் அவர்களின் கதைகளை நாம் கேட்பதில்லை. மஹாராஷ்ட்ராவின் இந்த புகழ்பெற்ற ராய்காட் மலைப்பகுதி மும்பைக்கு தெற்கே சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு 460 குதிரைகள் வேலை செய்கின்றன. அவற்றை பராமரிப்பவர்கள் (அனைவரும் அவற்றுக்கு சொந்தக்காரர்கள் கிடையாது) “அவர்கள் ஒவ்வொரு நாளும் 20 முதல் 25 கிலோ மீட்டர் தூரம் வரை மலையேற வேண்டும்“ என்று நம்மிடம் கூறினார்கள். இது உங்களுக்கு ஆச்சர்யமூட்டுவதாக இருக்கலாம். இது குதிரை மற்றும் அதை பராமரிப்பவர்கள் அல்லது இருவருக்குமே பெருஞ்சுமைதான்.






