ஆயிரக்கணக்கில் கடந்து செல்கின்றனர். அன்றாடம் நடந்தபடி, மிதிவண்டிகளில், லாரிகளில், பேருந்துகளில் அல்லது கிடைக்கும் எந்த வாகனத்திலும் ஏறி வருகின்றனர். சோர்வு, அயற்சி, வீட்டை அடைய வேண்டும் என்ற கவலை மட்டுமே கைத்துணை. அனைத்து வயது ஆண், பெண், குழந்தைகளும் நடக்கின்றனர்.
இம்மக்கள் ஹைதராபாத் அல்லது அதற்கும் அப்பாலில் இருந்து கிளம்பி, மும்பை குஜராத் அல்லது விதர்பா, மேற்கு மகாராஷ்டிரா போன்ற பிரதேசங்களுக்குச் செல்கின்றனர். அல்லது பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிஷா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற கிழக்குப் பகுதி பிராந்தியங்களுக்கு நடக்கின்றனர்.
ஊரடங்கால் வருமானமும், வாழ்வாதாரமும் இல்லையென்றான நிலையில் கோடிக்கணக்கானோர் நாடெங்கும் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் கிராமத்திற்கு குடும்பத்தினருடனும் உறவுகளுடனும் திரும்பிச் செல்கின்றனர். பயணம் எவ்வளவு கடினமாக இருந்தாலும், ஊருக்குப் போய்விடுவது நல்லது எனக் கருதுகின்றனர்.
நாட்டின் புவியியல் மையமான நாக்பூரைக் கடந்தே பலரும் செல்கின்றனர். இயல்பான நேரங்களில் நாக்பூர், நாட்டின் முக்கிய ரயில் சந்திப்புகளில் ஒன்றாக உள்ளது. அதனைக் கடந்து மக்கள் இப்படிச் செல்வது பல வாரங்களாக தொடர்கிறது. மத்திய, மாநில அரசுகள் பேருந்துகள், ரயில்கள் மூலம் புலம் பெயர்ந்தவர்களை அழைத்துச் செல்ல தொடங்கியும் இது தொடர்கிறது. ஆனால் இருக்கை கிடைக்காத ஆயிரக்கணக்கானோர் தங்களது நெடுந்தூர, வீடு நோக்கிய பயணத்தை கிடைக்கும் பாதையில் மேற்கொள்கின்றனர்.
















