பெரிய புளியமரங்கள் சூழ்ந்த அவரது திறந்தவெளி பட்டறையில் அமர்ந்துகொண்டு, மணிராம் மண்டாவி உளியை வைத்து காற்றில் அசைக்கும் புல்லாங்குழலை தயாரித்துக்கொண்டிருக்கிறார். அது ஒரு இசைக்கருவி. அதனை காற்றில் ஆட்டும்போது அது ரம்மியமான இசையை வெளிப்படுத்தும். விலங்குகளை அச்சுறுத்துவதற்கான கருவியாகவும், அதனை பயன்படுத்தலாம். “எனது சிறுவயதில் காடுகளில் புலிகள், சிறுத்தைகள் மற்றும் கரடிகள் உள்ளிட்ட விலங்குகள் இருக்கும். நாம் இதை ஆட்டினால், அது எழுப்பும் ஒலியைக் கேட்டு, அவை உங்களிடம் இருந்து தள்ளி நிற்கும்“ என்று 42 வயதான மணிராம் கூறுகிறார்.
அவர் மூங்கிலால் செய்யப்படும் கருவியை, ‘காற்றில் ஆடும் புல்லாங்குழல்‘ என்கிறார். சட்டிஸ்கரில் உக்குட் பன்சுரி. அதற்கு வாய்ப்பகுதி கிடையாது. இரண்டு துவாரங்கள் மட்டுமே உள்ளன. காற்றில் அதை அசைக்கும்போது, அது இசையை கொடுக்கும்.
42 வயதான மணிராம் ஒரு நாளில் உளி மூலம் ஒரு புல்லாங்குழலை தயாரிப்பார். ஒவ்வொரு புல்லாங்குழலும் அருகில் உள்ள நகர சந்தை அல்லது கைவினைஞர்கள் கூட்டமைப்பில் விற்பதன் மூலம் அவருக்கு ரூ.50ஐ பெற்றுத்தரும். பின்னர் வாடிக்கையாளர்களுக்கு ரூ.300க்கு விற்கப்படும்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், சிறந்த புல்லாங்குழல் கருவி தயாரிக்கும் மந்தர் சிங் மந்தாவியை சந்திக்க வாய்ப்பு கிடைத்ததது, மணிராமை, பன்சுரி செய்யும் பணிக்கு கொண்டு வந்தது. “எனது 15 வயதில் ஒருமுறை காடுகளுக்கு விறகு சேகரிக்க சென்றபோது என்னை அழைத்த மந்தாவி, நீ பள்ளிக்குச் செல்வதில்லையா, எனில் நான் உனக்கு ஒன்றை கற்றுக்கொடுக்கிறேன் என்றார்“ என்று அவர் கூறுகிறார். அதனால், பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, மறைந்த புல்லாங்குழல் இசை கருவி தயாரிக்கும் அவருடன் பணி செய்ய துவங்கிவிட்டார்.




