“உன்னை தூக்கி எறிந்து மண்ணுக்குள் புதைத்து விடுவோம்.”
இதுதான் சுரங்க ஓப்பந்ததாரர் மதுரியா தேவியிடம் கூறியது. பண்டல்கண்டின் முக்கியமான ஆறுகளில் ஒன்றான கென் சீரழிக்கப்படுவதற்கு எதிராக ஜூன் ஒன்றாம் தேதி போராட்டத்தில் கலந்துகொண்ட தன் மீதும் மற்ற 20 விவசாயிகள் மீதும் ஒப்பந்ததாரர் கோபத்தில் உள்ளதாக கூறுகிறார் மதுரியா.
அன்றைய நாள், இரண்டு மணி நேரமாக நண்பகல் வரை கென் ஆற்றுக்குள் நீர் சத்தியாகிரகம் செய்தனர் கிராமத்தினர். இந்த ஆறு, மத்தியபிரதேசத்தின் ஜபல்பூரில் ஆரம்பித்து மத்தியபிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் வழியாக 450கிமீ பயணம் செய்து பாண்டா மாவட்டத்தில் உள்ள சில்லா கிராமத்தில் ஓடும் யமுனை ஆற்றில் ஒன்று சேர்கிறது. இந்த மாவட்டத்தில் உள்ள திண்ட்வாரி வட்டத்தில்தான் மதுரியாவின் கிராமம் உள்ளது.
ஆனால், உள்ளூர் மக்கள் ஆற்றின் இரு கரையிலும் மணலை தோண்டி எடுப்பதால், சிறு கிராமங்கள் வழியாக பாயும் கென் ஆற்றின் நிலப்பரப்பு சுருங்கியுள்ளது. இரண்டு மணல் குவாரி நிறுனவங்களின் ஆதரவுடன் இந்த மாஃபியாக்கள் செயல்படுகின்றன. இந்த குவாரி முறைகேடானது மட்டுமல்லாமல் தங்கள் நிலங்களையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கிறது என கூறுகிறார் 63 வயதான மதுரியா தேவி. இவருக்கு கென் ஆற்றுக்கு அருகில் அரை ஏக்கர் நிலம் உள்ளது.
“புல்டோசர்களை பயன்படுத்தி எங்கள் நிலங்களை அதிகளவில் – 100 அடி ஆழத்திற்கு கூட - தோண்டுகின்றனர். ஏற்கனவே எங்கள் மரங்களை சாகடித்து விட்டனர். தற்போது, நாங்கள் இதுவரை தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த ஆற்றை கொல்கிறார்கள். போலீசிடம் கூட சென்றோம். ஆனால் எங்கள் பேச்சை யாரும் கேட்கவில்லை. எங்களை அச்சுறுத்துகிறார்கள்….”
இந்த மணல் குவாரி எதிர்ப்பில் சாத்தியப்படாத கூட்டணி அமைந்துள்ளது. ஆம், தலித்தான மதுரியாவும் தாக்கூர் விவசாயியும் இரு குழந்தைக்கு தாயுமான 38 வயது கணவனை இழந்த சுமன் சிங் கவுதமும் போராட்டத்தை முன்னின்று நடத்துகின்றனர். அவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்திலிருந்தும் மணல் எடுத்துள்ளார்கள். “எங்களை பயமுறுத்த வானில் சுடுகின்றனர்” என்கிறார்.
கப்திஹா கலன் கிராம விவசாயிகள் பெரும்பாலும் கோதுமை, கொள்ளு, கடுகு மற்றும் பயறு வகைகளை விளைவிக்கின்றனர். “எனக்குச் சொந்தமான நிலத்தில் கடுகு பயிரிட்டிருந்தேன். மார்ச் மாதம் அதையெல்லாம் தோண்டி எடுத்துவிட்டார்கள்” என்கிறார் சுமன்.


















