உழவர் திருமூர்த்தி, தன் தந்தையின் நினைவு நாளுக்கு வைக்கும் படையல் மிகவும் புதுமையானது. பத்து விதமான சோப்புகள்; பலவகை தேங்காய் எண்ணெய் ரகங்கள் மற்றும் அவருடைய மாபெரும் வெற்றிப் படைப்பான மஞ்சள் தூள். இவை தவிர, செவ்வாழை சீப்பு, பூக்கள், தேங்காய் போன்றவையும் படைக்கப்பட்டு, மாலையிடப்பட்ட தந்தை சுந்தரமூர்த்தியின் புகைப்படத்துக்கு காட்டப்படும் கற்பூர ஆரத்தியுடன் நினைவு நாள் படையல் நிறைவு பெறுகிறது
’என் அப்பாவுக்கு இதைவிடச் சிறந்த மரியாதை வேறென்ன இருக்க முடியும்?’, எனத் தன் முகநூல் நிலைத்தகவலில் கேட்கிறார் திருமூர்த்தி. பல ஆண்டுகள் முன்பேயே அவர் தந்தை மஞ்சள் விவசாயத்தை நிறுத்தி விட்டிருந்தார். திருமூர்த்தி, அதை மீண்டும் கையில் எடுத்த போது, அனைவரும் வேண்டாம் எனச் சொன்னார்கள்.
‘மல்லிப்பூ விவசாயம் பண்ணு.. தினமும் வருமானம் வரும் என்றார்கள்.. அதை மறுத்து, மஞ்சள் விதைத்த போது அனைவரும் சிரித்தார்கள்’, எனப் புன்னகையுடன் நினைவு கூர்கிறார் திருமூர்த்தி. மஞ்சள் வேண்டாம் எனச் சொன்ன ஆலோசனை தவறு என நிரூபித்தார் திரு. மஞ்சள் சாகுபடியில் அவரது வெற்றி, அரிதான ஒன்று. மகத்தான ஒன்று.
ஈரோடு மாவட்டம், பவானி சாகர் தாலுக்கா, உப்புப்பள்ளம் குக்கிராமத்தில் வசிக்கும் 43 வயதான திருமூர்த்தி, 12 ஏக்கர் நிலத்தில் (அவரும், அவரது சகோதரரும் உரிமையாளர்கள்) விவசாயம் செய்து வருகிறார். மஞ்சள், வாழை, தென்னை என மூன்று பயிர்களைச் சாகுபடி செய்துவருகிறார். ஆனால், அவற்றை மொத்த வியாபாரிகளுக்கு விற்பதில்லை. அந்த வணிக முறையில், விற்பனை விலை உங்கள் கையில் இல்லை.. எனவே, அதைச் செய்வதில் எந்தப் பிரயோசனமுமில்லை என்கிறார் திருமூர்த்தி. உள்ளூரில், மாநில அளவில், தேசிய அளவில், உலக அளவில், விலை நிர்ணயம் செய்வது பெரும் வணிகர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் அரசுகள்
2019 ஆம் ஆண்டு, இந்தியா 190 மில்லியன் டாலர் மதிப்புள்ள மஞ்சள் பொருட்களை ஏற்றுமதி செய்தது. இது உலக மஞ்சள் வணிகத்தில் 62.6% சதவீதமாகும். இந்தியா உலகின் இரண்டாவது பெரிய (11.3%)மஞ்சள் இறக்குமதியாளரும் கூட. கடந்த சில வருடங்களாக அதிகரித்து வரும் இறக்குமதி, இந்திய மஞ்சள் உற்பத்தியாளர்களைப் பெரிதும் பாதித்துள்ளது.
உள்ளூர் சந்தைகள், குறிப்பாக ஈரோடு மஞ்சள் மண்டிகள், உற்பத்தியாளர்களை நசுக்கி வருகின்றன. பெரும் வணிகர்களும் நிறுவனங்கள் சார்பாக பெருமளவில் கொள்முதல் செய்பவர்களும்தான், மஞ்சளின் விற்பனை விலையை நிர்ணயிக்கிறார்கள். இங்கே இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் மஞ்சளுக்கு உயர் விலை கிடைப்பதில்லை. மஞ்சள் விலைகள் வருடத்துக்கு வருடம் பெருமளவில் வேறுபடுகின்றன. 2011 ஆம் ஆண்டு, குவிண்டாலுக்கு 170000 என்னும் உயர்விலையைத் தொட்ட மஞ்சள், அடுத்த ஆண்டே, அதில் நான்கில் ஒரு பங்காக வீழ்ச்சி அடைந்தது. 2021 ஆம், மஞ்சள் குவிண்டாலுக்கு 7000 ரூபாய் என்னும் அளவில் உள்ளது.
தன் முனைப்பு, விடா முயற்சி மற்றும் சமூக ஊடக ஆதரவு இவற்றின் மூலமாக, இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை திருமூர்த்தி அடைந்துள்ளார் – மதிப்புக் கூட்டுதல் என்பதே அது. இவ்வழியை எல்லா உழவர்களும் செய்ய முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால், இது மிக முக்கியமான சாதனை.
‘நான் என் தோட்டத்தில் விளையும் தேங்காயை அப்படியே விற்றால், எனக்கு ஒரு காய்க்கு 10 ரூபாய் கிடைக்கும். ஆனால், அதிலிருந்து எண்ணெயை எடுத்து, சோப்புகள் மற்றும் கூந்தல் எண்ணெய் தயாரித்து விற்கையில், ஒரு காய்க்கு 30 ரூபாய் வரை கிடைக்கிறது. மஞ்சளிலும் இதேதான். 1.5 ஏக்கரில் இயற்கை வழியில் நான் உற்பத்தி செய்யும் மஞ்சளான 3000 கிலோவை, நான் மண்டியில் விற்றால், எனக்கு கிலோவுக்கு 50 ரூபாய் நஷ்டம் ஆகும்’, என்கிறார் திருமூர்த்தி.



























