34 வயதாகும் ஜுனாலி ரிசாங், அபோங் சாராயம் செய்வதில் திறமைசாலி. “சில நாட்களில் நான் 30 லிட்டருக்கும் மேல் அபோங் தயாரிப்பதுண்டு,” என அவர் சொல்கிறார். சாராயம் தயாரிக்கும் பலர் ஒரு வாரத்தில் சில லிட்டர்கள் தயாரிப்பார்கள். மொத்த முறையையும் மனித உழைப்பில்தான் செய்ய வேண்டும்.
அசாமின் பிரம்மபுத்திரா ஆற்றிலுள்ள மஜுலி தீவின் கரமூர் டவுனிலுள்ள தன் மூன்று அறைகள் கொண்ட வீடும் அதன் கொல்லைப்புறமும்தான் ஜுனாலி சாராயம் தயாரிக்கும் இடம். அடிக்கடி வெள்ளப்பெருக்கு நேரும் ஆற்றினால் உருவான ஒரு சிறு குளத்துக்கருகே வீடு இருக்கிறது.
அதிகாலை 6 மணிக்கு அவரை சந்தித்தோம். அவர் வேலையில் இருந்தார். இந்தியாவின் கிழக்கில் இருக்கும் இப்பகுதியில் சூரியன் உச்சத்துக்கு வந்திருந்தது. கொல்லையில் சாராயத் தயாரிப்பை தொடங்க விறகடுப்பை தயார் செய்கிறார் ஜுனாலி. அவரின் உபகரணங்களும் பொருட்களும் வீட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது.
நொதிபானமான அபோங், அசாமின் பட்டியல் பழங்குடியான மைசிங் சமூகத்தால் தயாரிக்கப்படுகிறது. உணவுடன் பருகப்படும் பானம் அது. மைசிங் பரத் சந்தி சொல்கையில், “மைசிங் மக்களான எங்களுக்கு அபோங் இல்லாமல் எந்த விழாவும் பூஜையும் கிடையாது,” என்கிறார். கராமூர் மார்க்கெட்டில் இருக்கும் மஜுலி கிச்சனுக்கு சந்திதான் உரிமையாளர்.
இளமஞ்சள் நிற பானமான அது அரிசி மற்றும் மூலிகைகள் கொண்டு, ஜுனாலி போன்ற மைசிங் பெண்களால் மட்டுமே தயாரிக்கப்பட்டு கராமூரின் உணவகங்களுக்கும் கடைகளுக்கும் விற்கப்படுகிறது. “ஆண்கள் இதை செய்ய விரும்புவதில்லை. கடின உழைப்பை கோரும் வேலை என்பதாலும் மூலிகைகள் தேடுவது களைப்பு கொடுக்கும் என்பதாலும் அவர்கள் இதை செய்வதில்லை,” என்கிறார் ஜுனாலி சிரித்தபடி.






















