உமா பட்டீலின் 2 அறைகள் கொண்ட வீட்டின் ஒரு ஓரத்தில் உள்ள சிறிய இரும்பு பீரோவில், கையில் எழுதிய ஒரு தசாப்தத்தின் பதிவுகள், பெரிய பதிவேடுகள், நோட்டுகள், டைரிகள் உள்ளன. கணக்கெடுப்பு படிவங்களின் நகல்களும் அதில் உள்ளன. அனைத்தும் ஒன்றன் மேல் ஒன்றாக பாலிதீன் கவர்களில் போடப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
குழந்தை பிறப்பு குறித்த தகவல்கள், நோய்த்தடுப்பு, இளம்பருவத்தினருக்கான ஊட்டச்சத்து, கருத்தடை, காசநோய் உள்ளிட்ட பல்வேறு சுகாதார கட்டமைப்பிற்கு தேவையான கிராமப்புற மஹாராஷ்ட்ராவின் விவரங்களை, அங்கீகரிக்கப்பட்ட சுகாதார ஊழியர் பதிவு செய்யும் தகவல்களே இங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும். இந்த பெரிய பெரிய புத்தகங்களை உமா 2009ம் ஆண்டு முதல் வைத்திருக்கிறார். இவை அனைத்தும் மஹாராஷ்ட்ராவின் சங்லி மாவட்டம் மிராஜ் தாலுகாவின் அராக் கிராமத்தில் உள்ள மக்களின் சுகாதார பராமரிப்பு குறித்த விவரங்கள். அவர் தொடர்ந்து அவரது கிராமத்தினருக்கு சுகாதார பிரச்னைகள் குறித்து அறிவித்தும், வழிகாட்டியும் வருகிறார்.
45 வயதான உமாவைப்போல், மஹாராஷ்ட்ரா முழுவதும் 55 ஆயிரம் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள், தினமும் நீண்ட நேரம் செலவிட்டு, கிராமங்களின் அடிப்படை சுகாதார பராமரிப்பை உறுதிசெய்கிறார்கள். இந்தப்பணிகள் 2005ம் ஆண்டு தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் மூலம் துவங்கப்பட்டன. சமுதாய சுகாதார ஆர்வலர்கள் அனைவரும் பெண்கள், 23 நாள் பயிற்சிக்கு பின்னர் பணியமர்த்தப்படுவார்கள். தேசிய கிராமப்புற சுகாதார திட்டம், ஆதிவாசி கிராமங்களில் ஆயிரம் பேருக்கு ஒரு சமூக சுகாதார ஆர்வலர் இருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்குகிறது. (அவர்கள் கட்டாயம் 8ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்) ஆதிவாசிகள் அல்லாத கிராமத்தில் 1,500 பேருக்கு ஒரு சமூக சுகாதார ஆர்வலர் இருக்க வேண்டும் எனவும் கூறுகிறது. (அவர்கள் கட்டாயம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்).
15,600 பேர் வசிக்கும் பெரிய கிராமம் அராக், அங்கு உமாவுடன் 15 அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள் தினமும் காலை 10 மணி முதல் தங்கள் பணிகளை துவங்கிவிடுவார்கள். மிராஜ் தாலுகாவில் பெடாக், லிங்னுர், கட்டாவ், ஷிண்டேவாடி மற்றும் லட்சுமண்வாடி ஆகிய கிராமங்களுக்கு அராக் முக்கிய ஆரம்ப சுகாதார மையமாகவும் உள்ளது. இங்கு உள்ள 47,000 பேருக்கு 41 அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள் உள்ளார்கள்.
ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலரும் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்வது, கூடுதல் நேரம், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் என அவர்களுக்கு கட்டாயம் செய்ய வேண்டிய 5 மணி நேர வேலையைவிட இந்த வேலைகளு்ககாக அவர்கள் செலவிடும் நேரம் கூடுதலாகிறது. “வீடுகள், கிராமத்திற்குள் இருந்தால், இரண்டு மணி நேரத்தில் 10 முதல் 15 வீடுகளுக்கு சென்றுவிடலாம். ஆனால், சிலர் பண்ணைகளில் வசிப்பார்கள். இதனால், 5 மணி நேரத்தைவிட கூடுதலான நேரம் நான்கு வீடுகளுக்கு செல்வதற்கே எடுத்துக்கொள்ளும். மேலும், நாங்கள் பல கிலோமீட்டர் தூரங்கள் புதர்கள், வயல்வெளிகள் மற்றும் மண் பாதையிலேயே நடந்து செல்ல வேண்டும். மழைக்காலங்களில் அது மிக மோசமாக இருக்கும்“ என்று உமா கூறுகிறார்.















