2019 ன் சுற்றுச்சூழல் பிரிவில் ராம்நாத் கோயங்கா விருது பெற்ற காலநிலை மாற்றம் பற்றிய கட்டுரை தொகுதியின் ஒரு பகுதி, இந்த கட்டுரை.
மேற்கு காமெங் மாவட்டத்திலுள்ள லகாம் கிராமத்தைச் சேர்ந்த நாடோடி மேய்ப்பரான பெம்பா சூரிங், 35, "ட்ஸோமோ இப்போது எங்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது." என்கிறார்.
ட்ஸோமோவா? அது என்ன? 9000 அடிக்கும் அதற்கு மேலும் உள்ள அருணாச்சல பிரதேச மலைகளில் அவற்றை பிரபலமாக்குவது எது?
ட்ஸோமோ என்பது யாக் மற்றும் கோட் ஆகியவற்றின் கலப்பினம் ஆகும், இது ஒருவகை மேட்டு நில கால்நடையாகும். ட்ஸோ என்பது ஆண் கலப்பின கால்நடை, இது மலட்டுத்தன்மை உடையது, எனவே மேய்ப்பர்கள் பெண் இனமான ட்ஸோமோவையே விரும்புகின்றனர். இது ஒரு புதிய இனம் இல்லை என்றாலும் அரை நாடோடி மேய்ப்பர் இனமான ப்ரோக்பா மக்கள், கிழக்கு இமயமலையில் மாறிவரும் பருவ நிலைக்கு ஏற்றவாறு இந்த கால்நடைகளை அதிகமாக தங்கள் மந்தைகளில் சேர்த்துக் கொள்கின்றனர்.
45 விலங்குகளை உடைய பெம்பாவின் மந்தை, யாக் மற்றும் ட்ஸோமோ இரண்டையும் உள்ளடக்கியது. இந்த யாக் கால்நடை கலப்பினங்கள், "அதிக வெப்பத்தை எதிர்க்கும் மற்றும் குறைந்த உயரங்களுக்கும், உயரும் வெப்பநிலைக்கும் ஏற்றதாக இருக்கும்" என்கிறார்.
இந்த உயரமான மேய்ச்சல் நிலங்களில் வெப்பம் அல்லது வெப்பமயமாதல் மிகவும் உண்மையானதாகவும், ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகவும் இருக்கிறது. இங்கு ஒரு ஆண்டில் வெப்பநிலையை பொறுத்தவரையில் 32℃ நாட்கள் என்பதே இல்லை. ஆனால், மைனஸ் 35℃ யை எளிதில் தாங்கக்கூடிய யாக், இந்த மலைகளில் சமீபத்திய ஆண்டுகளில் இருப்பது போல - வெப்பநிலை 12℃ அல்லது 13℃ க்கு அப்பால் உயர்ந்தால் மிகவும் சிரமப்படுகிறது. உண்மையில் இத்தகைய மாற்றங்கள் நிகழும்போது ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்புமே சிரமப்படுகிறது என்கிறார்.
பெரிய மோன்பா பழங்குடியினருக்குள் வரும் நாடோடி மேய்ப்பர் இனமான ப்ரோக்பா இனம் (2011 அருணாச்சலப்பிரதேச கணக்கெடுப்பின்படி சுமார் 60,000 பேரைக் கொண்டுள்ளது) பல நூற்றாண்டுகளாக மலையிலுள்ள மேய்ச்சல் நிலங்களில் யாக்கை வளர்த்து வருகின்றனர். கடும் குளிர்காலத்தில் அவை கீழ் பகுதிகளில் வாழ்கின்றன, கோடையில் அவை அதிக உயரத்திற்கு இடம்பெயர்கின்றன. அவை 9000 முதல் 15000 அடி வரை நகரும்.
ஆனால், லடாக்கின் சாங்தாங் பகுதியிலுள்ள சாங்பா மக்களைப் போலவே, ப்ரோக்பா மக்களும் எப்போதும் ஒழுங்கற்ற பருவ நிலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல நூற்றாண்டுகளாகவே அந்த சமூக மக்களின் வாழ்வாதாரங்கள் யாக், கால்நடைகள், ஆடு மற்றும் செம்மறி ஆடுகளை வளர்ப்பது மற்றும் அவற்றை வளர்ப்பதை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கிறது. இவற்றில் பொருளாதார, சமூக மற்றும் ஆன்மீக மட்டங்களில் கூட யாக்கையே இம்மக்கள் அதிகம் சார்ந்துள்ளனர். இந்தப் பிணைப்பு இப்போது மிகக் கடுமையான குறை மதிப்பிற்கு உட்பட்டுள்ளது.
"பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே வெப்பம் காரணமாக யாக் மிகவும் சோர்ந்துவிடுகிறது" என்று சந்தர் (அங்கு சந்தேர் என்று உச்சரிக்கப்படுகிறது) கிராமத்திலுள்ள ஒரு மேய்ப்பரான லேகி சுசூக், என்னிடம் கூறினார். மே மாதம் மேற்கு காமெங்கின் திராங் வட்டத்திற்கு நான் சென்றபோது அவரது குடும்பத்தினருடன் நான் தங்கினேன். "கடந்த பல ஆண்டுகளாக, கோடைகாலம் நீடித்துக் கொண்டே வருவதால், இங்கு வெப்பநிலை உயர்ந்துள்ளது. யாக்கும் பலவீனமடைந்து வருகிறது" என்று நாற்பதுகளின் பிற்பகுதியில் இருக்கும் லேகி கூறுகிறார்.

