“காந்தியின் நாட்குறிப்பில் உங்களது எண்ணைப் பார்த்தோம். நெடுஞ்சாலைக்கு அருகில் கார் மோதி அவர் உயிரிழந்து விட்டார்.” என்று அந்தப் பகுதியில் மளிகையின் கடையின் உரிமையாளராக உள்ளவரும், அரசியல் செயற்பாட்டாளருமான பி.கிருஷ்ணையா கடந்த டிசம்பர் 9 ஞாயிற்றுக்கிழமை அன்று 7.30 மணியளவில் தொலைபேசி வாயிலாகத் தெரிவித்தார்.
நான் நவம்பர் 24 அன்று பெங்களூரு-ஹைதராபாத் நெடுஞ்சாலைப் பகுதியில் கங்கப்பாவை இல்லை காந்தியைக் கடைசியாகப் பார்த்தேன். அப்போது காலை 10:30 மணி இருக்கும். அவர் அவரது பணியைத் துவங்க காந்தி வேடம் அணிந்து அனந்தபூர் நகரை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தார். அவர் அனந்தபூர் பகுதியிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராப்தடுக் கிராமத்தில் உள்ள உணவகம் ஒன்றில் தங்கி இருந்தார். ”ஏறத்தாழ இரண்டு மாதத்திற்கு முன்னர், யார் வயதான முதியவர் ஒருவருக்கு தங்க இடம் வேண்டும் என்று கூறினார்கள். எனவே, நான் அவரை இங்கு தங்குவதற்கு அனுமதித்தேன். ஏன் சில சமயங்களில் அவருக்கு உணவும் அளித்துள்ளேன்” என்றார் அந்த உணவகத்தின் உரிமையாளரான வெங்கடராமி ரெட்டி. என்னைத் தொலைபேசியில் அழைத்த கிருஷ்ணையா இந்தக் கடையில் தேநீர் அருந்தி விட்டு என்னை அழைத்தார். அவர் எப்போதாவது தான் கங்கப்பா உடன் பேசி வந்துள்ளார்.
நான் அவர் குறித்து கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் பாரியில் ஒரு கட்டுரை எழுதினேன். 70 ஆண்டுகள் விவசாயக்கூலியாகப் பணிபுரிந்த அவர், தற்போது மகாத்மா காந்திப் போன்று தன்னை மாற்றிக்கொண்டுள்ளார். காந்தி போன்று உடை அணிந்து ஆந்திர பிரதேச மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள அனந்தபூர் நகரின் பொதுவிடங்களில் சிலைப் போன்று நிற்கிறார். அதன் மூலம் இரந்து அவர் ஈட்டக்கூடிய வருமானமானது, அவர் விவசாயக்கூலியாக உழைத்து சம்பாதித்ததைவிட அதிகமாவே இருந்துள்ளது.
வயல்களில் வேலை செய்யும் போது மயக்கம் வரத்தொடங்கியதை அடுத்து, கங்கப்பா கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து விவசாயக்கூலியாகப் பணிபுரிவதை நிறுத்தியுள்ளார். அதற்குப்பின்னர்,பணம் ஈட்டுவதற்காக கயிறு திரிக்கத் தொடங்கியுள்ளார். ஆனால், அவரின் வயது முதிர்வின் காரணமாக அவரால் அதிகபணம் ஈட்டமுடியவில்லை.எனவே, அவர் காந்தியைப் போன்று வேடமிட முடிவுசெய்திருக்கிறார்.
மேலும், தினம் நாம் பயன்படுத்தக் கூடிய பொருட்களில் இருந்தே தனது மாறுவேட அலங்காரத்தை மேம்படுத்தி இருந்திருக்கிறார். அவர் காந்தியைப் போன்று “பிரகாசமாக” இருப்பதற்காக 10 ரூபாய் பிளாஸ்டிக் டப்பாவில் உள்ள பான்ஸ் முகப்பூச்சைப் பயன்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி, சாலையோரக் கடைகளில் மலிவு விலைக்கு வாங்கியக் கண்ணாடிகளே அவருக்கு காந்தியின் கண்ணாடிகளாக இருந்துள்ளது. அங்குள்ள சந்தையில் 10 ரூபாய்க்கு வாங்கிய கரும்பை ஊன்றுக் கோலாக கொண்டுள்ளார். எங்கேயோ கண்டெடுத்தக் இருசக்கர வாகனத்தின் முன்புறக்கண்ணாடியையே அவர் உடை மாறுவேடம் தரிப்பதற்கும், வேடம் போடுவதற்கும் பயன்படுத்தியுள்ளார்.



