“சாதாரணமா ஒரு நாள்ல நான் நாப்பது அம்பது கிலோமீட்டர் சைக்கிள் மிதிச்சு என்னோட பிளாஸ்டிக் பக்கெட்களையும் பானைகளையும் விப்பேன்” என்கிறார் அ. சிவக்குமார். 33 வயதான அவர், நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசூர் எனும் குக்கிராமத்தைச் சேர்ந்தவர். சாதாரணமாக, அவரது ஒரு நாள் காலை ஐந்து மணிக்கு தொடங்குகிறது. கலர் கலரான பிளாஸ்டிக் பொருள்களைத் தொங்கவிடுவற்கு ஏற்றமாதிரி மாற்றியமைக்கப்பட்ட அவரது சைக்கிளில் அவர் தனது பிழைப்பை நடத்துகிறார். சாதாரணமாக ஒரு நாளில் அவர் 300 அல்லது 400 ரூபாய் சம்பாதிப்பதாகவும் சொல்கிறார் அவரது ஆறு பேர் கொண்ட குடும்பத்துக்கான செலவுகளுக்கு அது போதுமானது.
இப்போதைய நாட்கள் சாதாரணமான நாட்கள் அல்ல.
பொது அடைப்பு காலகட்டத்தில் அவரால் அவரது பிழைப்பை நடத்த முடியவில்லை. அவரது குடும்பத்துக்கான வருமானம் நின்றுபோனது. கொரோனா வைரஸ் நெருக்கடியால் இருண்டு போன அவரது வாழ்வில் நம்பிக்கை ஒளிக் கீற்றாக வானவில்லை அவர் பார்க்கிறார். “ வானவில் மட்டும் இல்லையென்றால் நாங்கள் பட்டினியில் மாட்டியிருப்போம்” என்கிறார் அவர்.
நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியின் பெயர்தான் வானவில். ஏப்ரல் 21 வரை 44 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதி செய்திருக்கிற மாவட்டது இது. வைரஸ் தொற்று அபாயம் பெரிய அளவில் உள்ள மாவட்டங்களில் இதுவும் ஒன்று.
நாடோடிகளாக வாழும் இனக்குழுக்களைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு கல்வி அளிப்பதுதான் இந்தப் பள்ளியின் பொதுவான பணி. தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளியில் வகுப்புகள் நடைபெற வில்லை. அரசூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள குடும்பங்களுக்கு மளிகைப் பொருள்கள் கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்து வருகிறது. பொது அடைப்பு தீவிரமடைந்த உடன் பள்ளியின் சார்பாக உதவி செய்கிற குடும்பங்களின் எண்ணிக்கை என்பது 1228 ஆக உயர்ந்தது.அவற்றில் ஏறத்தாழ ஆயிரம் குடும்பங்கள் மிகவும் கடுமையான முறையில் புறக்கணிப்புக்கு ஆளாகியிருக்கிற சமூகங்களைச் சேர்ந்தவை. இங்கிருக்கிற ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு இந்த வானவில் என்பது அவர்களின் உணவு பாதுகாப்புக்கான முக்கியமான மையமாக மாறியிருக்கிறது.









