மறைந்திருந்து மர ஆந்தை எழுப்பும் மெல்லிய சத்தத்தையும் நான்கு வகை சிலம்பன்கள் எழுப்பும் சத்தத்தையும் அவரால் அறிந்து கொள்ள முடியும்.
பி.சித்தன் படிப்பை நிறுத்திவிட்டார். ஆனால் நீலகிரியிலுள்ள அவரது வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் இருக்கும் பறவை இனங்களை பற்றிய அவரது அறிவு, பறவையியல் நிபுணரின் அறிவுக்கு ஒப்பானது.
“பொக்கபுரத்தில் மூன்று சிறுவர்களுக்கு சித்தன் எனப் பெயரிடப்பட்டது. எந்த சித்தன் என யாரேனும் கேட்டால், ‘பறவைகளை தேடி ஓடும் அந்த குருவி சித்தன்’ என கிராமவாசிகள் குறிப்பிடுவார்கள்,” என்கிறார் அவர் பெருமையுடன் சிரித்தபடி.
அவரின் அதிகாரப்பூர்வ பெயர் பி.சித்தன். ஆனால் முதுமலையின் கிராமங்களிலும் காடுகளிலும் அவரை குருவி சித்தன் எனதான் கூறுவார்கள். குருவிகள் Passeriformes என்கிற இனவகையை சேர்ந்தவை. பறவை இனங்களில் பாதி இந்த வகையை சார்ந்தவைதான்.
மேற்கு தொடர்ச்சி மலையில் எங்கு இருந்தாலும் நான்கைந்து பறவைகள் பாடுவதை நீங்கள் கேட்க முடியும். நீங்கள் கவனித்து கற்றுக் கொள்ள வேண்டும்,” என்கிறார் நீலகிரி அடிவாரத்தில் இருக்கும் அனக்கட்டி கிராமத்தின் ஆரம்பப்பள்ளி ஆசிரியரான 28 வயது விஜயா சுரேஷ். முதுமலை புலிகள் காப்பகத்துக்கு அருகே வாழும் பல இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் சித்தனிடமிருந்து விலைமதிப்பற்ற தகவலை பெற்றதாக அவர் சொல்கிறார். அப்பகுதியிலும் சுற்றுவட்டாரத்திலும் விஜயாவால் 150 பறவைகளை இனங்காண முடியும்.
















