அந்தத் தோட்டத்தில் ஐந்துக்குப் பத்து அடி அளவில் செங்கல், சிமெண்ட்டால் ஆன சிறிய நினைவுத்தூபியின் இப்படி எழுதப்பட்டிருந்தது: ‘சேத்தன் தடராவ் கோப்ரகடே; பிறப்பு - 8/8/1995; இறப்பு - 13/5/18.’ புலியால் அடித்துக்கொல்லப்பட்ட மகனின் நினைவாக அவருடைய பெற்றோர் அமைத்துள்ள தூபி, அது.
சேத்தனுக்கு 23வயதாக இருக்கும்போது அவருடைய அக்கா பயலின் திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. அதையடுத்து தன்னுடைய திருமணத்தை நடத்த அவர் திட்டமிட்டிருந்தார். ”எங்கள் பகுதியில் புலி நடமாட்டம் இருப்பது தெரியும். ஆனால் அவன் புலியடித்து கொல்லப்படுவான் என பயங்கரமான கனவாகக்கூட நினைத்துப்பார்க்க முடியவில்லை...அதுவும் எங்களின் தோட்டத்திலேயே..” என்கிறார் பயல்.
அன்று கடுமையான வெயில் மே மாதத்தின் மாலை 6 மணி இருக்கும்.. அவர்களின் அம்கோன் கிராமத்தில் மாடுகளுக்கான தீவனத்தை எடுத்துக்கொண்டு சேத்தன் தங்கள் தோட்டத்துக்குச் சென்றிருந்தார். 7 மணி ஆகியும் அவர் வீடுதிரும்பவில்லை. அதனால் அவரின் தம்பி 17வயது சாகில், அவரின் மைத்துனர் விஜய் அவரைத் தேடிப் போனார்கள். அவருடைய அரிவாள்தான் கீழே கிடந்தது. அந்தக் குடும்பத்தின் 5 ஏக்கர் நிலம், அவர்களுடைய வீட்டிலிருந்து வெறும் 500 மீட்டர் தொலைவில், சாலையைக் கடந்தவுடன் வந்துவிடும். அதைக் கடந்தால் வறண்ட இலையுதிர்வகை தேக்கு, மூங்கில் மரங்களைக் கொண்ட வனம் இருக்கிறது.
அதைப் பார்த்தவுடன் இருவரும் புலிபுலி என அலறினார்கள். மற்றவர்களை உதவிக்கு கூப்பிட்டார்கள். சிறிது தொலைவு தள்ளி பச்சையான கத்யாலு தீவனச் செடிகளுக்கு இடையே புலியால் தாக்கப்பட்ட சேத்தனின் சடலம் இருந்தது. அந்த வட்டாரத்தில் பதுங்கியிருக்கும் புலியால்தான் அவர் கொல்லப்பட்டிருக்கும் என ஊர்க்காரர்கள் அனைவருக்கும் புரிந்துவிட்டது.
தோட்டத்தை அடுத்த காட்டுப்பகுதியைக் காட்டி, அந்தக் காட்டுக்குள் புலி போனதைப் பார்த்தோம்; அது நன்றாக வளர்ந்த புலி; பார்க்க பசியோடும் கோபத்தோடும் இருந்தது என்கிறார் விஜய்.
சுருங்கிவரும் பொதுநிலம்
இந்தச் சிறிய சமூகத்தினரின் சமூக, அரசியல் நிகழ்வுகளை வழிநடத்திய இளைஞரின் மரணம், ஆம்கான் மக்களை அச்சத்திலும் இருண்மையான அமைதிக்குள்ளும் தள்ளிவிட்டது. மழைக்காலம் வந்தும்கூட ஒருவரும் நிலங்கள் தரிசாகவே இருந்தன. தோட்டங்களுக்குள் போவதற்கு அவர்களுக்குத் துணிவு இல்லை.
போர் புலிகள் சரணாலயத்தைச் சுற்றியுள்ள வட்டாரத்தில் வார்தா மாவட்டம், செலூ வட்டத்தில், இருக்கிறது இந்த ஊர். சரணாலயச் சுற்றுவட்டாரத்தில் வனப் பாதுகாப்புச் சட்டப்படி புறம்போக்கு நிலத்தை கட்டுமானத்துக்கோ புல்வெளிக்காகவும் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இந்தப் பகுதி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் மையத்தில் மனிதர்கள் நடமாட்டம் வனத்துறையால் ஒழுங்குபடுத்தப்படுவதாகும். இந்த வட்டாரக் காடுகள் அல்லது பகுதியைத் தாண்டி கிராமங்கள் அமைந்துள்ளன.
போர் வனச்சரகம் நாக்பூரிலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ளது. இது, நாட்டின் மிகச்சிறியதும் புதியதுமான வனச்சரகம் ஆகும். 138 சதுர கிமீ பரப்பைக் கொண்ட இந்தப் பகுதி, 2014 ஜூலையில் இது புலிகள் சரணாலயப் பகுதியாக அறிவிக்கப்பட்டது.












