"இந்தப் புதிய கணக்கை நீங்கள் இங்கே தொடங்குகிறீர்கள்," என்று மிகவும் கவலைப்பட்ட தீரஜ் ரெஹுவமன்சூர் வங்கி மேலாளரிடம், "ஆனால் நான் இதை நாட்டின் வேறு எந்தப் பகுதியிலிருந்தும் இயக்க முடியுமா?" என்றார்.
சிரித்துக்கொண்டே, “நான் உங்களுக்கு ஏடிஎம் அட்டைத் தருகிறேன். அதை நீங்கள் உங்கள் சொந்த மாநிலத்திலும் நகரத்திலும், எங்கெல்லாம் ஏடிஎம் இருக்கிறதோ அங்கெல்லாம் பயன்படுத்தலாம்” என்று சஞ்சய் ஆஷ்டுர்கர் கூறுகிறார்.
"அதனால் எனக்கு என்ன பயன்?" இன்னும் கவலையுடன் கேட்கிறார் தீரஜ். “ஏடிஎம் அட்டையை எப்படி பயன்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை. அது என் கைரேகையுடன் வேலை செய்யுமா?"
இப்போது வங்கி மேலாளர் கவலைப்பட வேண்டும். இது நியாயமான கேள்வி என்று அவருக்குத் தெரியும். அவர் பேசிக் கொண்டிருப்போரில் மூவர் படிக்காதவர்கள் என்று அவருக்குத் தெரியும். ரேகை முதலிய அடையாளங்கள் ஒரு நாள் அவர்களுக்கு பதில் கொடுக்கலாம். ஆனால் அவுரங்காபாத் மாவட்டத்தின் அடுல் நகரில் அத்தகைய அளவீட்டு முறைகள் எதுவும் இல்லை. ரேகை அடையாளங்கள் இருக்குமிடங்களிலும் அது பயன்படுத்தப்படுவதில்லை அல்லது பழுதாகியிருக்கிறது. உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமத்திலோ அல்லது அவரது குடும்பம் தற்போது வசிக்கும் லக்னோவின் கிராமப்புறத்திலோ தீரஜ் ஏடிஎம்மை அணுகுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்பதையும் அவர் அறிவார்.
"எனக்கு காசோலை புத்தகம் கிடைத்தால், அதனுடன் என் கைரேகையையும் பயன்படுத்தலாமா, இல்லையா?" இல்லை, உண்மையில் இல்லை. இது காசோலைப் புத்தக வசதி இல்லாத சேமிப்பு வங்கிக் கணக்கு.
தீரஜ் கண்ணீர் விடும் நிலையில் இருந்தார். “எனது குடும்பத்திற்கு எப்படி பணத்தை திருப்பி அனுப்புவது? நான் அதை இங்கே கொடுத்தால் - அவர்கள் லக்னோ வரை சென்றாலும் - அவர்கள் அதை எப்படி எடுப்பார்கள்? என் பணம் அவர்களுக்குக் கிடைக்கும் வரை அவர்கள் பசியுடன் இருப்பார்கள்.”
மகாராஷ்டிராவில் உள்ள அடுலில் பணிபுரியும் ஐந்து வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 11 தூய்மைப் பணியாளர்களில் தீரஜ்ஜும் ஒருவர். இவருடைய அதே குடும்பப் பெயரைக் கொண்ட மற்ற நான்கு பேரும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் அசாம், ஜார்கண்ட், பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு ரூ.350 வருமானம் ஈட்டுகின்றனர். இந்தச் சாதாரணத் தொகையைக் கொண்டு அந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உணவு, தங்குமிடம், போக்குவரத்து, உடைகள் போன்ற அனைத்துச் செலவுகளையும் பூர்த்தி செய்கின்றனர். நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பு நீக்க உத்தரவு மூலம் துண்டிக்கப்படும் வரை அவர்கள் வீட்டுக்குக் கொஞ்சம் பணமும் அனுப்ப முடிந்திருந்தது.
நாங்கள் ஸ்டேட் வங்கியின் இணை நிறுவனமான ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத்தின் அடுல் கிளையில் இருக்கிறோம். மேலாளர் உட்பட வங்கி ஊழியர்களின் குழு, புலம்பெயர்ந்தோருக்கானக் கணக்குகளைத் திறக்க தங்களால் இயன்றவரை முயற்சி செய்து வருகிறது. வேலை நேரம் கடந்துவிட்டது, ஆனால் துயரில் வாடும் இந்தக் குழுவிற்கு உதவ ஊழியர்கள் இன்னும் பணியில் இருக்கிறார்கள். இன்று இரவு, அவர்கள் தங்கள் புதிய வாடிக்கையாளர்களுக்கானத் தரவுகளை சரிபார்ப்பார்கள்.. நாளை கணக்குகள் செயல்படும். முந்தைய நாள் நாம் சென்றிருந்த உஸ்மானாபாத்தின் கூட்டுறவு வங்கிக் கிளையில் பார்த்த ஏழை வாடிக்கையாளர்களுக்கு எதிரான விரோதப் போக்கிலிருந்து இந்தக் கிளையின் அணுகுமுறை முற்றிலும் வேறாக இருந்தது. இப்போது வங்கியில் எஞ்சியிருக்கும் வாடிக்கையாளர்கள் புலம்பெயர்ந்தோர் மட்டுமே. "அதிகப் பணிக் காரணமாக சர்வர் செயலிழந்ததால், வழக்கமான செயல்பாடுகளை இன்று முன்னதாகவே நாங்கள் நிறுத்த வேண்டியிருந்தது" என்று ஒரு ஊழியர் விளக்குகிறார். புதிய சர்வர் வந்துவிட்டது.




