இந்தக் குழு, கிராமப்புறப் பெண்கள் செய்யும் பெரிய அளவிலான பணிகளைச் சித்தரிக்கும் புலப்படும் பணியும், புலப்படாத பெண்களும் என்ற புகைப்படக் கண்காட்சியின் ஒரு பகுதியாகும். அனைத்து புகைப்படங்களும் 1993 மற்றும் 2002 க்கு இடையில் 10 இந்திய மாநிலங்களில் P. சாய்நாத்தால் படமாக்கப்பட்டவை. PARI, பல ஆண்டுகளாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து உருவாக்கிய புகைப்படக் கண்காட்சியை இங்கு ஆக்கப்பூர்வமாக டிஜிட்டல்மயமாக்கியுள்ளது.
வயல், ஆனால் ஒருவருக்கு சொந்தமானதல்ல
புகைப்படம் எடுப்பது நிலத்தின் சொந்தக்காரருக்கு பிடித்திருக்கிறது. வரிசையாக 9 பெண் தொழிலாளர்கள் அவரது வயலில் நடவு நடும் பணிகளை செய்துகொண்டிருக்கும்போது, அவர் நின்றுகொண்டிருக்கிறார். அவர்களுக்கு ரூ.40 (82 சென்ட்) கொடுப்பதாக அவர் கூறுகிறார். அவர் ரூ.25 (51 சென்ட்) கொடுப்பதாக பின்னர் பெண் தொழிலாளர்கள் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் ஒரிசாவின் ராயகடாவின் நிலமில்லா தொழிலாளர்கள்.
இந்தியாவில் சொந்த நிலம் வைத்துள்ள குடும்பங்களில் பிறந்த பெண்களுக்கு நிலத்தில் உரிமை கிடையாது. அவர்களின் பெற்றோரின் வீடுகளிலும் உரிமை கிடையாது. அவரது கணவன் மற்றும் மாமனார், மாமியாரியாருடையதிலும் உரிமை கிடையாது. கைவிடப்பட்ட, கணவனை இழந்த அல்லது விவாகரத்து பெற்ற பெண்கள் அவர்கள் உறவினர்களின் நிலத்தில் கூலித்தொழிலாளர்களாகின்றனர்.








