“காய்ச்சல், வலியோடு மயங்கியும் விழுந்தாள் கீதா. அடுத்த நாள் அவள் வாந்தியெடுத்ததும் எனக்கு பயம் அதிகமாகிவிட்டது” என்கிறார் சதேந்தர் சிங்.
ஞாயிற்றுக்கிழமையான அடுத்த நாள் சதேந்தருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. டாடா நினைவு மருத்துவமணைக்குச் செல்வதற்காக தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு உடனடியாக போன் செய்தார். அங்கு சென்றதும் கீதாவிற்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. திங்களன்று அவரது பரிசோதனை முடிவு பாசிட்டிவாக வந்தது.
கீதாவிற்கு வயிற்றில் புற்றுநோய் உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, சதேந்தரும் கீதாவும் மத்திய மும்பையின் பரெல் பகுதியில் உள்ள டாடா நினைவு மருத்துவமணை அருகில் இருக்கும் நடைபாதையில் தங்குவதற்கு திரும்பவும் வந்தனர். சில வாரங்களுக்கு முன்பு வரை, மருத்துவமணையிலிருந்து 50கிமீ தொலைவிலுள்ள டோம்பிவேலியில் அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்தனர். அதுவும் பல கட்ட கெஞ்சலுக்குப் பிறகு, உணவுக்கும் வாடகைக்கும் பணம் கொடுப்பதாக உறுதி கொடுத்தப் பிறகே.
கீதா, 40, சதேந்தர், 42, இருவரும் மகராஷ்ட்ராவின் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள இச்சல்கரஞ்சி ஊரிலிருந்து மும்பைக்கு நவம்பர் மாதம் வந்தனர். அவர்களது 16 வயது மகன் பாதல் மற்றும் 12 வயது மகள் குஷி, சதேந்தரின் மூத்த சகோதரரான சுரேந்திராவின் வீட்டில் இருக்கின்றனர். பத்து வருடங்களுக்கு முன்பு, பீகார் மாநிலத்தின் டோதாஸ் மாவட்டத்தில் உள்ள கனியாரி கிராமத்திலிருந்து மும்பைக்கு புலம்பெயர்ந்தனர். கீதாவோடு மும்பைக்கு வருவதற்கு முன்பு வரை, இச்சல்கரஞ்சியில் உள்ள விசைத்தறி தொழிற்சாலையில் மாதம் 7,000 ரூபாய்-க்கு சதேந்தர் வேலை பார்த்து வந்தார்.
“விரைவிலேயே திரும்பி வருவோம் என எங்கள் குழந்தையிடம் வாக்குறுதி கொடுத்திருந்தோம். ஆனால் அவர்களின் முகங்களை இனி எப்போது பார்ப்போம் என எங்களுக்கு தெரியவில்லை” என மார்ச் மாதம் என்னிடம் கூறினார் கீதா.
நவம்பர் மாதம் இவர்கள் மும்பைக்கு வந்தபோது, கோர்ஜியான் புறநகர் பகுதியில் உள்ள சதேந்தரின் உறவினர் வீட்டில் தங்கினர். ஆனால் கொரோனா பயம் காரணமாக அவர்களை தன்னுடைய வீட்டிலிருந்து வெளியேறுமாறு அவர் கேட்டுக்கொண்டார். “(அதன்பிறகு) ரயில் நிலையங்களிலும் இந்த நடைபாதையிலும் நாங்கள் தங்கினோம்” என மார்ச் 20-ம் தேதி என்னிடம் இதையெல்லாம் கூறினார் கீதா. அதன்பிறகு இருவரும் டோம்பிவேலிக்குச் சென்றுவிட்டனர். (பார்க்க: ஊரடங்கு காலத்தில் மும்பை நடைபாதையில் புற்றுநோய்)





