"வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் உங்கள் கணவர் பைத்யநாத் 13 மாதங்கள் சிறையில் இருந்தபோது உங்களுக்கு மிகவும் கடினமாக இருந்திருக்குமல்லவா?" என நான் புருலியாவில் பபானி மஹதோவிடம் கேட்கிறேன். "இவ்வளவு பெரிய கூட்டுக் குடும்பத்தை நடத்துவது சிரமமாக இருந்திருக்குமே…!"
"அவர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது மிகவும் மோசமாக இருந்தது," என அமைதியாக ஆனால் உறுதியாக சொல்கிறார். "அவர் தனது நண்பர்களை அழைத்து வருவார் அல்லது நான் அவர்களுக்கு சமைக்க வேண்டும் என்று அர்த்தம். அவர்கள் வந்து உணவை எடுத்துக்கொள்வார்கள். சில நேரங்களில் 5, 10, 20 அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்களாக இருப்பார்கள். எனக்கு ஒரு நிமிடமும் ஓய்வு இருந்ததில்லை."
"ஆனால் நிச்சயமாக, வெள்ளையனே வெளியேறு இயக்கத்துடனான உங்களின் தொடர்பு....."
"அதில் செய்ய எனக்கு என்ன இருக்கிறது, அல்லது அதுபோன்ற எதிலும் எனக்கு செய்ய என்ன இருக்கிறது?" என அவர் கேட்கிறார். “எனக்கும் போராட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என் கணவர் பைத்யநாத் மஹதோ அதில் பங்குபெற்றார். நான் ஒரு பெரியக் குடும்பத்தை கவனிப்பதில் மும்முரமாக இருந்தேன். அந்த மக்கள் அனைவருக்கும் சமைக்க வேண்டும். நான் எவ்வளவு சமையல் செய்ய வேண்டியிருந்தது தெரியுமா?- ஒவ்வொரு நாளும் சமையல் வேலை அதிகரித்தது!” என்கிறார் பபானி. "நான் விவசாயத்தையும் பார்த்துக் கொண்டேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்."
நாங்கள் திகைத்துப் போய் நின்றோம். எங்கள் முகத்தில் ஏமாற்றம் தெரிகிறது. இன்னும் உயிருடன் இருக்கும் சுதந்திரப் போராட்ட வீரர்களைத் தேடி மேற்கு வங்கத்தின் தொலைதூரப் பகுதிக்கு வந்திருந்தோம். இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த வரலாற்றுப் போராட்டத்தில் பெரும்பங்காற்றியவர் அப்போராட்டத்துடன் எந்தத் தொடர்பையும் இல்லையென மறுப்பவர் மன்பஜார் I ஒன்றியத்தின் செபுவா கிராமத்தில் இருக்கிறார்.
பபானி மஹதோவுக்கு 101 முதல் 104க்குள் வயது இருக்கலாம். ஆனால் மிகத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் பேசுகிறார். தொலைதூர கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளின் வயதை ஆவணப்படுத்துவது பல நேரங்களில் சிரமமாக உள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, அவர் பிறந்தபோது, வயதை ஆவணப்படுத்தும் முறை இல்லை. ஆனால், பபானியின் வயது குறித்த ஓரளவு மதிப்பீட்டிற்கு அவரது மறைந்த கணவரின் பதிவுகள் மற்றும் 70 வயதுகளில் ஒரு மகன் உட்பட அவரது பெரியக் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராமங்களிலுள்ள சற்றே இளைய சமகாலத்தவர்களிடமிருந்து வருகிறோம்.
எப்படியிருந்தாலும், செயல்படாத ஆதார் அட்டை அமைப்பு மூலம் அவரின் தலைமுறை மக்களுக்கு வழங்கப்பட்ட தன்னிச்சையான வயதைக் காட்டிலும் மிகவும் நம்பகமான கணக்கீடு இது ஆகும். அங்கு, பபானிக்கு 1925 ஆம் ஆண்டு பிறந்த ஆண்டாக ஒதுக்கப்பட்டது. அதன்படி அவருக்கு 97 வயது.
அவருக்கு 104 வயது என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.









