"பல முறை கடைசி நபராக நான் வெளியேறும் பட்சத்தில், சுமார் மதியம் 2 மணி போல இருக்கும், நான் வருகைப் பதிவேட்டை எடுத்துக் கொண்டு ஓடி வருவேன். நான் வீட்டிற்கு வரும் வரை மூச்சு கூட விட மாட்டேன். யாராவது இருக்கிறார்களா என்று திரும்பிப் பார்த்துக் கொண்டே வருவோம். ஆனால் பயந்தாலும், எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் போய் தான் ஆக வேண்டும். ஏனென்றால் எங்களுக்கு பணம் தேவைப்படுகிறது", என்று சம்பா ராவத் கூறுகிறார்.
வேகமாக நடந்தபடியே அவர் சேலைத் தலைப்பால் தொடர்ந்து முக்காட்டை சரி செய்தபடியே தனது முகத்தை மூடிக் கொள்கிறார். தானா கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் (MGNREGA) கீழ் வேலைகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்று சம்பா என்னிடம் கூறுகிறார். தனது கிராமத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நீர் பாசன அகழிகள் கொண்ட ஒரு நிலத்தை அவர் சுட்டிக்காட்டி, "இது தான் நாங்கள் வேலை பார்த்த இடம்”, என்று கூறினார். ஆனால் இந்த முறை (2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்) எங்களுக்கு நான்கு கிலோ மீட்டர் தள்ளி ஒரு இடம் வழங்கப்பட்டது, அது இதைவிட தனிமை படுத்தப்பட்ட இடம்", என்று கூறுகிறார். அங்கு நடந்து செல்வதற்கு ஒரு மணி நேரம், திரும்பி வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகும். 2005 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த மைல்கல் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் (MGNREGA) நன்மைகள் மற்றும் பலவீனங்களைப் பற்றிய விவரங்களை சம்பா தெரிவிக்கிறார். இந்தியாவில் உள்ள கிராமப்புற குடும்பங்களுக்கு ஒரு வருடத்திற்கு 100 நாட்கள் ஊதியம் உள்ள வேலைகளை வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் உள்ள மண்டல் தாலுகாவில் - சம்பாவின் கிராமமான தானா அமைந்துள்ளது - இத்திட்டம் 2019 ஆம் ஆண்டில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) மட்டும் மிகவும் அவசியமாக தேவைப்படுகிற, ஊதியம் உள்ள வேலைகளை 8,62,533 குடும்பங்களுக்கு வழங்கியுள்ளது. மேலும் 2013 ஆம் ஆண்டு முதல் இத்திட்டத்தால் பில்வாராவில் மொத்தம் 60 லட்சம் குடும்பங்களுக்கு வேலை கிடைத்துள்ளது.
இந்த வருமானம் பல குடும்பங்களின் பொருளாதாரத்தை சமாளிக்க உதவியாக இருக்கிறது, மீனா சால்வியின் குடும்பம் உட்பட, 19 வயதாகும் அவர் அவரது வீட்டின் ஒரே வருமானம் ஈட்டும் நபராகவும், நோயுடன் இருக்கும் தனது பெற்றோரையும் கவனித்துக் கொண்டும் இருக்கிறார். மீனாவும் தனிமை படுத்தப்பட்ட இடங்களில் வேலை செய்யும் சிக்கல்களைப் பற்றி பேசுகிறார். "நான் ஏன் பயப்படுகிறேன் என்றால் நான் தனியாக வீட்டிற்கு திரும்பி வர வேண்டும், குறிப்பாக நான் தான் வேலை செய்யும் கடைசி நபராக இருக்கிறேன் என்றால்", என்று அவர் கூறுகிறார்.
இந்த ஆண்டு மே மாதம் சம்பா மேற்பார்வை செய்யும் இடத்தில் வேலை செய்யும் 25 தொழிலாளர்களும் - அனைவருமே பெண்கள் - இவ்வளவு தொலைவு தள்ளி இடம் ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் செய்தனர். இந்த தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு செல்ல அவர்கள் ஒத்துக் கொண்டார்கள் என்றால் அடுத்த முறை பஞ்சாயத்து இன்னும் சற்று தொலை தூரத்தில் இருக்கும் இடத்தை அவர்களுக்கு ஒதுக்கும் என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள். "வேலை நடக்க வேண்டிய பிற இடங்கள் அருகிலேயே இருக்கின்றன", என்று சம்பா கூறுகிறார். இடையில் இருக்கும் காட்டை தாண்டாமல் எங்களால் இங்கு வர முடியாது. சில நேரங்களில் அங்கு வன விலங்குகளும், சில நேரங்களில் குடித்துவிட்டு வரும் மனிதர்களும் அங்கு இருப்பர்...", என்று அதே இடத்தில் வேலை செய்யும் சவிதா ராவத் கூறுகிறார். ஆனால் ஒரு வார கால போராட்டத்திற்கு பிறகு அவசரமாக பணம் தேவைப்படும் சிலர் மீண்டும் வேலைக்குத் திரும்பினர். சிலர் சம்பாவுடன் சேர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர் மேலும் அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு பிறகு மாற்று இடம் ஒதுக்கப்பட்டது.








