கணேஷ் சோரனுடைய காப்குபி பழங்குடியினரின் கருவிகளுள் மாறுபட்ட கருவி, கோமோக்கின் முன்னோடி, பெங்கால் நாட்டுப்புறக்கலையின் ஒரு முக்கிய கருவி. அவர் டோல் கருவி (மேளம்), அவரது மகனின் பொம்மையும் வைத்து இதை உருவாக்கியிருந்தார். அதன் ஸ்ருதி, தனது மகனின் வெகுளித்தனமாக சிரிப்பைப்போன்றும், அதன் தாளம் காடுகளை நினைவூட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். “எனது மனதை புதிதாகவும், இனிமையாகவும் வைத்துக்கொள்ள நான் இரண்டு இசைக்கருவிகளையும் 15 ஆண்டுகளாக வாசித்து வருகிறேன். ஒரு காலத்தில் எனது கடினமான வேலைகளை முடித்துவிட்டு வந்து ஓய்வாக சிறிது நேரம் வாசிப்பேன். அதை மற்றவர்களும் வந்து கேட்டு ரசிப்பார்கள். ஆனால், இன்று அவர்களுக்கு இசை கேட்க, பொழுதுபோக்க பல்வேறு வழிகள் உள்ளன. அதனால், இந்த வயதானவனை யாரும் கவனிக்க விரும்பவில்லை“ என்று அவர் கூறுகிறார்.
அவர்களின் கிராமத்தைச் சேர்ந்த நிறைய ஆண்கள் கொத்தனார்களாக, தினக்கூலிகளாக பல்வேறு நகரங்களில் பணிசெய்கிறார்கள். அதில் சிலர் இப்போது பனம் கருவியை எடுத்துச்சென்று வாசிப்பார்கள். ஆனால், பெரும்பாலானோர் இந்த பழங்கால இசைக்கருவியை வாசிக்க கற்றுக்கொள்வதற்கு முன்வருவதில்லை என்று கணேஷ் மற்றும் ஹோப்பன் இருவரும் கூறுகின்றனர். “இந்த கருவியில் தனித்தன்மையான இசையை உருவாக்கக்கூடிய திறன் உள்ளவர்கள் கொஞ்சம் பேர்களே இந்த கிராமத்தில் எஞ்சியுள்ளனர்“ என்று ஹோப்பன் கூறுகிறார்.
“உள்ளூர் பள்ளியில் கற்றுக்கொடுக்க முடியும் என்றால், சில விருப்பமுள்ள மாணவர்கள் இருக்கக்கூடும். அவர்களுக்கு கற்றுக்கொடுக்கலாம்“ என்று கணேஷ் கூறுகிறார். “ஆனால், இந்த தலைமுறையில் செல்போன்களிலும், ஆன்லைனிலும் ஒரே ஒரு பொத்தானை அழுத்தி அனைத்து வகை இசைகளையும் கேட்க முடிகிறது. எனில், அவர்கள் எவ்வாறு இந்தக்கருவிகளை வாசிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
கணேசோ அல்லது ஹோப்பனோ போன் வாங்கவோ அல்லது வைத்திருக்கவோ முடியுமா?
கணேஷ் மற்றும் ஹோப்பன் இருவரும் தங்களின் பொருளாதார சூழலுடன், பனம் இசைப்பது குறையும் நேரத்தை ஒப்பிடுகின்றனர். அவர்கள் ஏழையான வேளாண் கூலித்தொழிலாளர்கள் குறைந்த கூலிக்கு அதிக நேரம் வேலை செய்கின்றனர். “நான் பனம் வாசிக்க நினைத்தால், எனது முழு குடும்பமும் பல நாட்கள் பட்டினி கிடக்க நேரிடும்“ என்று கணேஷ் கூறுகிறார்.
“அந்த இசை எங்கள் பசித்த வயிறுகளை நிரப்பாது“ என்று ஹோப்பன் கூறுகிறார்.
தமிழில்: பிரியதர்சினி. R.