2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் பெங்களூரில் திட்ட மேலாளர் பணி கிடைத்தபோது, ஓராண்டில் பொதுமுடக்கத்தினால் இந்த வேலை பறிபோகும் என ஏரப்பா பாவ்கி நினைத்திருக்கவில்லை. 2020 ஜூன் முதல் வடகிழக்கு கர்நாடகாவின் பிதார் மாவட்டத்தில் உள்ள தனது காம்தானா கிராமத்தில் மத்திய அரசின் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலைசெய்து வருகிறார்.
“வேலையிழந்து ஒரு மாதம் கழித்து ஏப்ரலில் மத்திய அரசின் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் பற்றி அறிந்தேன்,” எனும் அவர், “வருவாய் ஈட்டினால்தான் என் குடும்பம் உயிர் வாழ முடியும். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது எங்களிடம் பணமில்லை. பண்ணை உரிமையாளர்களும் வேலைக்கு அழைக்காததால் என் தாயும் வேலையின்றி இருந்தார்.”
கடின உழைப்பு, அதிகரிக்கும் கடன், குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு, வைராக்கியம் போன்றவற்றுடன், வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளும் முனைப்புடன் படித்து, அதன் மூலம் கிடைத்த வேலை பொதுமுடக்கத்தினால் கைநழுவிப் போனது.
ஏரப்பா 2017ஆகஸ்ட் மாதம் தனியார் கல்லூரியில் பி.டெக் முடித்தார். அதற்கு முன் 2013ஆம் ஆண்டு அரசு பாலிடெக்னிக்கில் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் துறையில் டிப்ளமோ முடித்திருந்தார். இரண்டு படிப்புகளையும் பிதார் நகரில் படித்தார். பட்டப்படிப்பில் சேர்வதற்கு முன் வேளாண் கருவிகளை உற்பத்தி செய்யும் புனேவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்தில் தொழில்நுட்ப பயிற்சிபெறுபவராக பணியாற்றி மாதம் ரூ.12,000 வரை வருவாய் ஈட்டினார். “நான் நல்ல மாணவர் என்பதால் பெரிய பொறுப்புகள் கிடைக்கும், அதிலிருந்து நிறைய சம்பாதிக்கலாம் என நினைத்தேன். ஒரு நாள் என்னையும் பொறியாளர் என்று அழைப்பார்கள் என நினைத்திருந்தேன்,” என்கிறார் 27 வயதாகும் ஏரப்பா.
அவரை படிக்க வைக்க குடும்பத்தினர் பல கடன்களை பெற்றனர். “மூன்றாண்டிற்கு [பி.டெக் படிப்பிற்கு] ரூ.1.5 லட்சம் தேவைப்பட்டது,” என்கிறார் அவர். “உள்ளூர் சுய உதவிக் குழுவினரிடம் ரூ. 20,000, ரூ.30,000 வரை என் பெற்றோர் வாங்கித் தந்தனர்.” 2015 டிசம்பர் மாதம் ஐந்தாவது செமஸ்டர் படித்துக் கொண்டிருந்த போது அவரது 48 வயது தொழிலாளியான தந்தை மஞ்சள் காமாலையால் காலமானார். அவரது சிகிச்சைக்காக ரூ.1.5 லட்சம் ரூபாய் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் உறவினர்களிடம் பெற்றோம். “பட்டப் படிப்பை முடித்தபோது என் தோளில் அனைத்து பொறுப்புகளும் வந்துவிட்டன,” என்கிறார் ஏரப்பா.
பெங்களூரில் பிளாஸ்டிக் அச்சு வார்க்கும் இயந்திரங்களைச் செய்யும் சிறிய நிறுவனத்தில் அவருக்கு திட்ட மேலாளராக மாதம் ரூ.20,000 சம்பளத்தில் வேலை கிடைத்தபோது அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். அது 2019 மார்ச் மாதம். “என் தாய்க்கு மாதந்தோறும் ரூ.8000- ரூ.10,000 வரை அனுப்பினேன். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு எல்லாம் மாறிவிட்டது,” என்கிறார் அவர்.










