“இரண்டு மூணு வருடங்களுக்கு முன்னாலே வந்திருந்தீங்கன்னா அப்போதைய கதையே வேறு” என்கிறார் நியாஸ் அகமது. அவரது கடை டெல்லியின் லால் சவுக்கில் இருக்கிறது. அப்போதெல்லாம் பாஸ்மினா சால்வைகள் வேண்டும் வேண்டும் என்று பல இடங்களிலிருந்து தேவை அதிகமாக இருந்திருக்கிறது. நியாஸ் அகமதும் அவரைப் போன்ற மற்ற கடைக்காரர்களுக்கும் இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் இந்த சால்வைகளை விற்க முடிந்திருக்கிறது. அவர்களுக்குக் கொஞ்சம் லாபமும் கிடைத்திருக்கிறது.
பாஸ்மினா கம்பளி சால்வைகளைப் பற்றி நான் 2016 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். சாங்தாங்கி வெள்ளாடுகளின் ரோமங்களிலிருந்து தயாராகி சில்லறை விற்பனை கடைகளுக்கு போகும் அந்த கம்பளி சால்வைகளைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்க ஆரம்பித்தேன். அப்போது இந்தியாவையும் மத்திய ஆசியாவையும் இணைக்கும் சில்க் சாலையைப் பற்றித் தெரிந்துகொண்டேன். பாஸ்மினா கம்பளி சால்வைகளும் பட்டும் இந்த பாதையின் வழியாக நடைபெறும் வியாபாரத்தில் கொண்டாடப்படும் சரக்குகள் ஆகும்.
சாங்தாங்கி வெள்ளாடுகளை சாங்பா நாடோடி இடையர்கள் வளர்க்கிறார்கள். அவர்கள் திபெத் பீடபூமிக்கு மேற்கில், காஷ்மீரின் லடாக் நகரின் கிழக்குப் பகுதியில் இந்தியா - சீனா எல்லைக்கு அருகில் வசிக்கிறார்கள். கடல் மட்டத்துக்கு 4000, 5000 மீட்டர்களுக்கு மேலே உள்ள அவர்களின் குடியிருப்புகளில் வாழ்வதே சிரமமானது. பாஸ்மினா வெள்ளாடுகள், செம்மறியாடுகள், சில எருதுகள் ஆகியவற்றுக்கான மேய்ச்சல் பகுதிகளை கண்டறிவதே மிகவும் சிரமம். செப்டம்பர் முதல் மே மாதம் வரையிலும் நீடிக்கிற குளிர்காலங்களில் இங்கே உயிர் வாழ்வதே மிகவும் சிரமம். எரிபொருளை சேமித்தல், குழந்தைப் பராமரிப்பு, சமைத்தல், நூற்தல், என நீண்ட வேலை நாட்கள் இங்கே உண்டு.
ஒவ்வொரு சங்பா குடும்பத்திலும் குறைந்த பட்சம் 80 முதல் 100 வரையிலான விலங்குகள் இருக்கும். பெரும்பாலோர் 100 முதல் 150 வரையும் வைத்திருப்பார்கள் . சிலர் 300க்கும் மேலாக வைத்திருப்பார்கள். பொதுவாக, வெள்ளாடுகளையும் செம்மறியாடுகளையும் சம எண்ணிக்கையில் வைத்திருப்பார்கள். ஒரு சாங்தாங்கி வெள்ளாட்டிலிருந்து ஒரு குடும்பத்துக்கு 200 முதல் 300 கிராம் வரையிலான ரோமம் ஒரு வருட காலத்தில் கிடைக்கும்.
குளிர் நடுக்கத்தோடு உதித்த, 2016 ஆம் ஆண்டின் மார்ச் மாதக் காலைப்பொழுது அது. நான் பென்சென் செரிங் என்பவரைப் பார்த்தேன். அவர் தனது ஆட்டு மந்தையை தென்கிழக்கு சாங்தாங் பகுதியிலிருந்து ஹான்லே மற்றும் சுமூர் நகரங்களுக்கு இடையில் கொண்டு வந்திருந்தார். லே பகுதியில் கூட்டுறவு சொசைட்டி இருக்கிறது. அனைத்து சாங்தாங் ஆடு மேய்ப்பவர்களும் இணைந்து அதனை உருவாக்கியிருக்கின்றனர். அரசால் நடத்தப்படுகிற லடாக் மலை மேம்பாட்டு கவுன்சிலோடு அந்த சொசைட்டி இணைக்கப்பட்டிருக்கிறது. அது ஆடு மேய்ப்பவர்களிடமிருந்து நிச்சயிக்கப்பட்ட விலைக்கு ரோமத்தை நேரடியாக வாங்கிக் கொள்கிறது. முன்பு எல்லாம் இடைத்தரகர்கள் இருந்தார்கள். அவர்கள் நியாயமான விலையை தர மாட்டார்கள். தற்போது ஒரு கிலோ ரோமத்துக்கு கிலோ 2500 முதல் 2700 வரை தருகிறார்கள்.நான்கைந்து வருடங்களாக இந்த விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. ஏனென்றால் இந்த ரோமத்துக்கான கிராக்கி குறைந்திருக்கிறது. பாஸ்மினா கம்பளி அல்லாத மற்ற வகையான கம்பளி சால்வைகளும் கம்பளி ஆடைகளும் பஞ்சாப் மற்றும் மற்ற மாநிலங்களிலிருந்து சந்தைக்கு வந்திருக்கின்றன. அது பாஸ்மினா கம்பளி வியாபாரத்தைப் பாதித்திருக்கிறது.
ஹான்லே நகருக்கு 40 கிலோமீட்டர்கள் தள்ளி நான் பெமா சொகெட் என்பவரைப் பார்த்தேன். அவரது ஆறு குழந்தைகளில் மூத்த மகள் டெஹ்சன். 23 வயதானவர். அவர் தனது குடும்பத்தின் தொழிலை தொடர்ந்து செய்வதற்கு விரும்புகிறார். “ எங்களது பாரம்பரியத்தை முன்னேக்கி கொண்டு செல்பவர் அவர்”என்கிறார் பெமா. விலங்குகள் என்றால் டெஹ்சனுக்கு கொள்ளை ஆசை. அவற்றை மேய்ப்பது என்பதும் அவருக்கு பிடித்த விசயம்.






















