ஹதானேவில் இருக்கும் அரசு மருத்துவமனையின் வாசலுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஓர் ஆட்டோவில், ஒரு பெண் மயங்கி விழுந்து கொண்டிருந்தார். இன்னொருவர் தன் நெஞ்சில் அடித்துக் கொண்டு, ”என்னை விட்டு எங்கே போய்விட்டாய் அன்பே?” என கதறிக் கொண்டிருந்தார். எல்லா திசைகளிலிருந்தும் ஓலங்கள். சில குடும்பங்கள் ஆவணங்களை சரிபார்க்க குழுக்களாய் கூடியிருந்தனர். இன்னும் சிலர் வேறு மருத்துவமனையில் படுக்கை கிடைக்க முயற்சித்துக் கொண்டிருந்தனர்.
மே மாத தொடக்கத்தின் ஒரு வெப்பம் நிறைந்த திங்கட்கிழமையின் மதிய நேரம் அது. பல்கர் மாவட்டத்தின் ஹதானே கிராமத்திலிருக்கும் ரெவேரா மருத்துவமனைக்கு வெளியே குழப்பம் நிலவிக் கொண்டிருந்தது.
மருத்துவமனை வளாகத்துக்கு வெளியே ஒரு மரத்தடி சிமெண்ட் நடைமேடையில் அமர்ந்திருந்த குரு சவுத்ரி தொடர்ந்து பலரை தொலைபேசியில் அழைப்புத்துக் கொண்டிருந்தார். சகோதரியின் கணவர் இறந்துபோன தகவலை சொல்லிக் கொண்டிருந்தார். “நேற்று இரவு இறந்துவிட்டார்”, என தொலைபேசியில் தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டிருந்தார். ”அவர் எனக்கு சகோதரர் போல” என கடுகடுப்புடனும் துயரத்துடனும் என்னிடம் சொல்லத் தொடங்கினார். “இந்த காணொளியை பாருங்கள். இதில் நன்றாக இருக்கிறார். என் சகோதரி அவருடன் மருத்துவமனைக்குள் இருந்தார். அவருடைய ஆக்ஸிஜன் குடுவையிலிருந்து கசிந்து கொண்டிருந்தது… மருத்துவரை வந்த அவரை பரிசோதிக்குமாறு தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்…”
குருவின் மைத்துனரான 35 வயது வாமன் டிகாவை ஏப்ரல் 23ம் தேதி ரெவேராவுக்கு கொண்டு வருவதற்கு முன் கிராமத்துக்கு அருகே இருந்த இரு சிறு மருத்துவமனைகளுக்கு அவரின் குடும்பம் கொண்டு சென்றது. “அவரால் மூச்சு விட முடியவில்லை. சில நாட்களாக காய்ச்சலும் அதிகமாக இருந்தது. நாங்கள் பயந்துபோய் அவரை பரிசோதனைக்கு கொண்டு செல்வதென முடிவெடுத்தோம்,” என்கிறார் குரு. “அவருக்கு நிமோனியா இருப்பதாகவும் கோவிட் இருக்கலாம் என்றும் சொன்னார் மருத்துவர். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் சொன்னார். அருகே இருந்த மருத்துவமனைகள் எவற்றிலும் படுக்கை இல்லை. ஆக்சிஜனும் இல்லை.”
மொக்காடா தாலுகாவில் இருக்கும் அவர்களின் தக்படா கிராமத்திலிருந்து விக்ரம்கட் தாலுகாவில் இருக்கும் அரசின் ரெவெரா மருத்துவமனைக்கு அக்குடும்பம் 60 கிலோமீட்டர்கள் ஆம்பலன்சில் பயணிக்க வேண்டும். கோவிட்டுக்கு மட்டுமென தாலுகாவில் ஒதுக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை அது மட்டும்தான். 200 கோவிட் படுக்கைகள் (அவற்றில் பாதி தனிமை படுக்கைகள். பிறவை ஆக்சிஜன், வெண்டிலேட்டர்கள் அல்லது தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள். மாவட்ட இணையதளத்தில் இதை பற்றி கொடுக்கப்பட்டிருக்கும் தரவுகளில் தெளிவு இல்லை) இருந்தன.










