"நாங்கள் எவ்வளவு அதிகமாக வாங்குகிறோமோ, அவ்வளவு அதிகமான கடனில் நாங்கள் இருக்கிறோம்". என்று பெரும்பான்மை சௌரா ஆதிவாசிகள் வசிக்கும் கிராமமான கைராவிலிருந்து, 40 வயதாகும் விவசாயி குணாரி சபரி, எங்களிடம் கூறினார்.
"மாட்டு சாணம் மற்றும் கலப்பைகளுடனான விவசாயம் (கோபர்கட்டச்சாசா, ஹலாச்சாசா) எங்களுடையது, இப்போது யாரும் அதைச் செய்யவில்லை", என்று அவர் கூறினார். "இப்போது நாங்கள் எல்லாவற்றிற்கும் சந்தைக்கு ஓடுகிறோம். விதைகள், பூச்சிக்கொல்லிகள், உரங்கள் ஆகிய அனைத்திற்கும். முன்பு போலல்லாமல், நாங்கள் சாப்பிடுவதைக் கூட வாங்க வேண்டி இருக்கிறது", என்று கூறினார்.
குணாரியின் கூற்று ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தின் சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியம் வாய்ந்த மலைப்பகுதிகளில் வேரூன்றி வரும் பருத்தி சாகுபடியின் சார்பு நிலையைப் பிரதிபலிக்கிறது, அதன் பல்லுயிர் வளம், விவசாயிகளின் துயரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றின் மீது அது ஆழமான தாக்கங்களைக் கொண்டு இருக்கிறது (பார்க்க: ஒடிசாவில் பருவநிலை நெருக்கடிக்கான விதைகள் விதைக்கப்படுகின்றன). பருத்தி முதன் முதலில் வந்த ராயகடாவின் குனுபூர் வட்டத்தின் சமவெளிக்குத் தென்கிழக்கில் நாங்கள் இறங்கியபோது இது தெளிவாகத் தெரிந்தது. ஆந்திராவின் எல்லையில் இருக்கும், இங்குள்ள நிலப்பரப்பில் கண்ணுக்குத் தெரிந்தவரை பருத்தியின் ஒற்றைப் பயிர் சாகுபடி முறையாக இருக்கிறது. மேலும் - ஆழ்ந்த துயரமும் தெரிகிறது.
"நாங்கள் 10 - 12 ஆண்டுகளுக்கு முன்பு பருத்திக்கு மாறினோம். எங்களுக்கு வேறு வழியில்லை என்பதால் இப்போது நாங்கள் அதைச் செய்து வருகிறோம்". இது தான் குனுப்பூர் வட்டத்தில் உள்ள கைராவில் உள்ள பலர் எங்களிடம் கூறியது. இப்பகுதியில் உள்ள பல விவசாயிகள், தீவிர - மூலதனம் கொண்ட பருத்தியை நோக்கி நகர்ந்த போது, அவர்கள் படிப்படியாக தங்கள் சொந்த விதைகளையும், பல பயிர் செய்யும் முறைகளின் பாரம்பரிய முறைகளையும் இழந்துவிட்டதாகவும் கூறினர்.
"எங்களுக்கென எங்கள் சொந்த பயிர்கள் மற்றும் எங்கள் சொந்த விவசாய முறையும் இருந்தது" என்று ஒரு இளம் சௌரா விவசாயியான கேத்ரா சபரா கூறினார். "ஆந்திராக்காரர்கள் வந்து பருத்தியை வளர்க்கச் சொன்னார்கள், மற்றும் எல்லாவற்றையும் எங்களுக்குக் கற்றும் கொடுத்தார்கள்", என்று கூறினார். இங்குள்ள மற்றொரு விவசாயியான சந்தோஷ் குமார் தண்டசேனா, லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பு கிராம மக்களை கப்பா அல்லது பருத்தியின் பக்கம் ஈர்த்தது என்று கூறினார். "ஆரம்பத்தில் அது எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது, நாங்களும் பணம் சம்பாதித்தோம். ஆனால் இப்போது, அது துன்பம் மற்றும் இழப்புகளை மட்டுமே கொடுக்கிறது", என்று அவர் கூறினார். "நாங்கள் அழிக்கப்பட்டுவிட்டோம், மேலும் சாஹுகர்கள் [கடன் கொடுப்பபவர்கள்] மகிழ்ச்சியாக இருக்கின்றனர்", என்றும் கூறினார்.
நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது அடர் பச்சை நிற ஜான் டீரெ டிராக்டர்கள் கிராம சாலையில் மேலும் கீழும் செல்லும் சத்தம் கேட்டுக் கொண்டு இருந்தது. உள்ளூர் கோயில் சுவர்களில் Bt பருத்தி விதை நிறுவனங்களின் ஒடியா மொழியிலான விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. அந்த பயிருக்கான உழுகும் மற்றும் விதைக்கும் உபகரணங்கள் அனைத்தும் அந்த கிராம சதுக்கத்தைச் சுற்றியே இருந்தது.








