மோட்டார் பைக் விபத்தில் தன்னுடைய ஒரு காலை இழந்த 28 வயதாகும் பிம்லேஷ் ஜெய்ஸ்வால், பன்வெலில் இருக்கும் தன்னுடைய வாடகை வீட்டிலிருந்து 1200கிமீ தூரமுள்ள சொந்த ஊரான ரேவா மாவட்டத்திற்கு ஹோண்டா ஆக்டிவா-வில் பயணம் செய்யும் துணிச்சலான முடிவை எடுத்தார். இந்த ஸ்கூட்டரில் பக்க இருக்கையும் (சைட்-கார்) உண்டு. தன்னுடைய மனைவி சுனிதா, 26 மற்றும் அவர்களின் மூன்று வயது மகள் ரூபி ஆகியோருடன் பயணத்தை தொடங்கியுள்ளார். அவரிடம் கேட்டபோது, “எனக்கு வேறு வழியில்லை” என்கிறார்.
பன்வெலில் வீடுகளுக்கு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார் பிம்லேஷ். அவர் கூறுகையில், “ஒரு காலை வைத்துக்கொண்டு வேலை செய்வது கஷ்டமாக இருக்கிறது, ஆனால் எந்த வேலையாக இருந்தாலும் அதை செய்தாக வேண்டும்” என ஹினாய்தி கிராமத்திலுள்ள தன்னுடைய வீட்டிலிருந்து என்னிடம் போனில் கூறினார். இதே உத்வேகம்தான் 40 டிகிரி வெயிலிலும் அவரது பயணத்தை தொடரச் செய்தது. இது அவரது மனஉறுதியை எடுத்துரைக்கிறது. மேலும் விரக்தியே இவரைப் போன்ற புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்குச் செல்ல வைக்கிறது.
கொரொனா நோயை கட்டுப்படுத்த மார்ச் 24-ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்த போது, பிம்லேஷ் போன்ற லட்சக்கணக்கான தினசரி கூலி தொழிலாளிகள் படுபாதாள நிலைக்கு தள்ளப்பட்டனர். “எங்களுக்கு எந்த வேலையும் இல்லை, அதனால் உணவுக்கு என்ன செய்வது என தெரியவில்லை. எங்களுடைய வாடகை மற்றும் மின்சார கட்டணத்தையாவது செலுத்துங்கள். யாராவது நான்கு மணி நேர அறிவிப்பில் ஊரடங்கை நாடு முழுவதும் அமல்படுத்துவார்களா?” என்கிறார்.
அதன்பிறகும் பன்வெலில் 50 நாட்கள் தங்கியிருந்தோம். பிம்லேஷ் கூறுகையில், “உள்ளூர் அரசு சாரா அமைப்புகள் உணவும் அரிசியும் வழங்கினார்கள். எப்படியோ உயிர் பிழைத்தோம். ஒவ்வொரு முறை ஊரடங்கு காலம் முடியும் போதும் நிச்சியம் இந்த முறை தளர்வு அறிவிப்பார்கள் என நம்பினோம். நான்காம் கட்ட ஊரடங்கு அறிவித்த போதுதான், இனி இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என நாங்கள் உணர்ந்தோம். மும்பையை சுற்றியுள்ள பகுதிகளில் கொரொனா நோய்தொற்றும் வேகமாக பரவி வந்தது. இதனால் ஹினாய்தியில் உள்ள என் குடும்பத்தாரும் மிகவும் கவலையடைந்தனர்”.




