பாலய்யா விற்பதற்காக முடிவு செய்திருந்த, நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள நிலம் அவருக்கு நிச்சயம் ரூ.15 லட்சத்தைப்பெற்றுத் தரும் என்று தர்மரம் கிராமத்தில் உள்ள மக்கள் கூறுகின்றனர். அது அவரின் பல பிரச்னைகளை தீர்க்கும். சோளப்பயிர் சரியாக வளராததால், கடன்காரர்கள் அவரை வட்டிக்காக துரத்தி வருகிறார்கள்.
ஆனால், பாலய்யாவின் திட்டங்கள் அனைத்தும் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை அரசு பணமதிப்பிழப்பு செய்ததும் தலைகீழாக மாறிவிட்டது. அவரது நிலத்தை வாங்க முன்வந்தவர்கள் பின்வாங்கினர். “முதலில் எனது தந்தை மகிழ்ச்சியாக இருந்தார். பின்னர் இந்த பணமதிப்பிழப்பால், அவருக்கு யாரும் பணம் தரமாட்டார்கள் என உணர்ந்தார். பின்னர் அவர் துயரத்திலாழ்ந்தார்,“ என்று அகிலா நினைவு கூறுகிறார்.
ஆனாலும், பாலய்யா தனது முயற்சியைக் கைவிடவில்லை. நிலத்தை வாங்குபவர்களை தேடிக்கொண்டிருந்தார். ஆனால், பலருக்கு அவர்களின் சேமிப்பு அனைத்தும் ஓரிரவில் பயனற்றதாகிவிட்டது என்ற கவலை. இங்கு பலரிடம், பயன்பாட்டில் உள்ள வங்கிக் கணக்குகளும் இல்லை.
பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்திற்கு பின்னர், நவம்பர் 16ம் தேதி, சில காலத்துக்கு நிலத்தை யாராலும் வாங்க முடியாது என்பதை அவர் உணர்ந்தார். தனது வயலுக்கு சென்று, சோயா பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து இட்டார். அவரது சோளப்பயிர்கள் சரியாக முளைக்காததை அடுத்து அவர் சோயா பயிரிட்டிருந்தார். மாலையில் வயலில் மெய்சம்மா தேவிக்கு கோழியை பலியிட்டு வணங்கி, அதை இரவு உணவிற்கு உண்ண எடுத்துவந்தார்.
பாலய்யாவின் வீட்டில் விழாக்காலங்களில் மட்டுமே கோழி சமைப்பார்கள் அல்லது சிரீஷாவும் அவரது கணவரும் வீட்டிற்கு வரும்போது செய்வார்கள். அசைவ உணவை எப்போதும் பாலய்யாவே சமைப்பார். கடந்த புதன்கிழமையன்று அவரது கடைசி உணவும் திருவிழாவிற்கு செய்வதுபோல் இருக்க வேண்டும் என்று எண்ணினாரோ என்னவோ தெரியவில்லை. அது அந்த வாரத்தையே மறக்கச்செய்யும் இரவு உணவாக இருந்தது. அது அவரது உன்னதமான சொத்தை, மோசமான கனவாக்கியது. பாலய்யா, கோழிக்கறி உணவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்தார். குடும்பத்தில் யாருக்கும் இது தெரியாது. “இவ்வளவு பெரிய பிரச்னைகளில் குடும்பத்தை விட்டுச்செல்வதற்கு அவர் விரும்பவில்லை. அதனால், அனைவரையும் அழைத்துச்செல்ல முடிவெடுத்துவிட்டார்“ என பாலய்யாவின் உறவினர் கூறுகிறார்.
இரவு உணவின்போது பாலய்யா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்களின் 19 வயது மகன், கோழி உணவில் வித்தியாசமான மணம் வீசுவது குறித்து கேட்டதற்கு, “நான் காலை முதல் வயலில் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்துக்கொண்டிருந்தேன். அதனால், இந்த மணம் வீசுகிறது,” என்று பதிலளித்ததை தவிர வேறு ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை என்று அகிலா நினைவு கூறுகிறார். அவர்கள் சேர்ந்து அமர்ந்து அருந்திய இறுதி இரவு உணவை அவர் நினைத்துப் பார்க்கிறார்.
6 பேர் கொண்ட அவரது குடும்பத்தில், பாலய்யா, அவரது மனைவி பாலலட்சுமி, பி.டெக் படிக்கும் அவர்களின் மகன் 19 வயதான பிரசாந்த், பாலய்யாவின் 70 வயது தந்தை காலய்யா ஆகிய நால்வரும் கோழி உணவை உண்டனர். அகிலாவும், அவரது பாட்டியும் அசைவ உணவை உண்ணமாட்டார்கள். பாலய்யா மற்றும் காலய்யாவின் உயிரைப் பறித்துச்சென்ற அந்த இரவு உணவை சாப்பிடாமல் இருவரும் உயிரோடு இருக்கிறார்கள்.