”விவசாயத்தில் நெருக்கடி என்றெல்லாம் எதுவும் இல்லை.”
பஞ்சாபில் மிக வலிமையாக இருக்கும் அர்ஹ்தியாக்கள் சங்கத்தின் துணைத் தலைவர் தர்ஷன் சிங் சங்கேராவைச் சந்தியுங்கள். அந்த அமைப்பின் பர்னாலா மாவட்ட தலைவரும்கூட. அர்ஹ்தியாக்கள் என்பவர்கள் தரகர்கள். விவசாயிகளுக்கும் நுகர்வோருக்குமிடையில் பாலமாக இருப்பவர்கள். ஏலத்திற்கு ஏற்பாடு செய்வதும் வாங்குபவர்களிடம் அறுவடை செய்யப்பட்ட பயிர்களை கொண்டு சேர்ப்பதும் அவர்களது வேலை. தவிர கடன் தருபவர்களும்கூட. இந்த வணிகத்தில் அவர்களுக்கு நீண்ட வரலாறு இருக்கிறது. சமீப வருடங்களில், விவசாய இடுபொருட்களை கையாள்பவர்களாகவும் உருவாகி வருகிறார்கள். மாநிலத்தின் விவசாயிகள் மீது அவர்களுக்கு இருக்கும் கட்டுப்பாட்டை இவை எல்லாம் உணர்த்தக் கூடும்.
அர்ஹ்தியாக்கள் அரசியல்ரீதியாகவும் வலிமையானவர்கள். அவர்களுள் சில சட்டமன்ற உறுப்பினர்களும் உண்டு. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் முதல்வர் அமரிந்தர் சிங்கிற்கு Fakhr-e-Quam (சமூகத்தின் பெருமை) என்கிற பட்டத்தை தந்து இவர்கள் கௌரவித்தார்கள். இந்த நிகழ்வை மிகப்பெரிய பாராட்டு விழா என்று உள்ளூர் ஊடகங்கள் பதிவு செய்தன. அர்ஹ்தியாக்களுக்கு விவசாயிகள் தர வேண்டிய கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று முதல்வர் அறிவித்தவுடன் நடந்த நிகழ்வு அது.
பஞ்சாபின் கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் மத்தியில் கடன் தொல்லை பற்றிய ஒரு ஆய்வு, கிட்டத்தட்ட 86 சதவிகித விவசாய குடும்பங்களும் 80 சதவிகித விவசாய தொழிலாளர் குடும்பங்களும் கடனில் மூழ்கியிருப்பதாகச் சொல்கிறது. அதில் ஐந்தில் ஒரு பங்கு கடன், தரகர்களுக்கும் வட்டிக்குவிடுபவர்களுக்குமே தர வேண்டியிருக்கிறது. வேதனை என்னவென்றால் படிநிலையில் கீழ்ச் செல்ல செல்ல கடன் சுமை அதிகரித்திருக்கிறது. விளிம்பு நிலை, குறு விவசாயிகள்தான் மிக அதிக கடனில் இருக்கிறார்கள். இந்த ஆய்வு 1007 விவசாயிகள் மற்றும் 301 விவசாய தொழிலாளர்களின் வீடுகளில் நடத்தப்பட்டது. 2014-2015ல் இந்த ஆய்வு மாநிலத்தின் எல்லாப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டன. தீவிரமாகும் கடன் தொல்லைப் பிரச்னை மற்றும் அதிகரிக்கும் துயர் பற்றி பேசும் பிற ஆய்வுகளும் இருக்கின்றன.
ஆனால் தர்ஷன் சிங் சங்கேரா விவசாய நெருக்கடி என்பதே விவசாயிகளின் மோசமான செலவுகளால்தான் உருவானது என்கிறார். “அதனால்தான் அவர்களுக்கு பிரச்னையே” என்று உறுதியாகச் சொல்கிறார் அவர். “இடுபொருட்களை வாங்க நாங்கள் அவர்களுக்கு பண உதவி செய்கிறோம். தவிர, திருமணம், மருத்துவம் மற்றும் இதர செலவுகளுக்கும் உதவுகிறோம். அறுவடை தயார் நிலையில் இருக்கும்போது விவசாயி அதை அர்ஹ்தியாவிடம் ஒப்படைக்கிறார். நாங்களே அதைச் சுத்தம் செய்து, பைகளில் அடைத்து, அரசு, வங்கி,சந்தை என்று எல்லாவற்றுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறோம்.” நெல் மற்றும் கோதுமையின் மொத்த கொள்ளளவில் 2.5 சதவிகிதத்துக்கு ஒப்பான மதிப்பை தரகர்களுக்கு தருகிறது அரசு. இதில் அரசுத் தரப்பை கையாள்வது பஞ்சாப் மாநில விவசாய சந்தை வாரியம். விவசாயிகள் தங்களுக்கான விலையை தரகர்களிடமிருந்தே பெற்றுக்கொள்கிறார்கள். இதெல்லாம் வட்டி மூலம் வரும் வருவாய் போகஅர்ஹ்த்தியாக்களுக்கு கிடைக்கும் வருவாய்.





