விஜயவாடா வழியாகச் செல்லும் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தினமும் இரவு 10 மணியளவில் டிராஃபிக் டிவைடரில் பழைய வினைல் பேனரை விரிக்கின்றனர் செட்டி ஸ்ரீகாந்தும், செட்டி கோபிசந்தும். அதில் தங்களின் துண்டுகளை விரித்து உறங்கச் செல்கின்றனர்.
காலை 6 மணிக்கு வேலைக்காக தினக்கூலி தொழிலாளர்கள் காத்திருக்கும் பென்ஸ் சர்க்கிளை நோக்கி அவர்கள் நடக்கின்றனர். தொழிலாளர்கள் கூட்டத்திற்கு மிதிவண்டியில் வந்து உணவு விற்கும் வியாபாரிகளிடம் சிலசமயம் செட்டி சகோதரர்கள் இட்லி வாங்கிக் கொள்கின்றனர். பலநேரங்களில் வெறும் வயிற்றுடன்தான் அவர்கள் வேலைக்குச் செல்கின்றனர்.
“விஜயவாடாவிற்கு நாங்கள் வந்து ஓராண்டு இருக்கும்,” என்கிறார் 16 வயது ஸ்ரீகாந்த். 2016ஆம் ஆண்டு விவசாயப் பேரிழப்பால் குடும்பம் பாதிக்கப்பட்டதால், அவரும், 22 வயது கோபிசந்தும் தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் உள்ள மடுப்பல்லே கிராமத்தைவிட்டு வெளியேறினர். அதுவரை ஓரளவு குடும்பத்தை சமாளித்து வந்தனர். “எங்கள் தந்தை ஐந்து ஏக்கர் [குத்தகை] நிலத்தில் மிளகாய், பருத்தி, மஞ்சள் பயிரிடுகிறார். ஆனால் அந்த ஆண்டு எங்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. [கந்து வட்டிக்காரர்களிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கியதால் அத்தொகை இப்போது ஏழு லட்சம் ரூபாய் வரை வளர்ந்துவிட்டது],” என்கிறார் ஸ்ரீகாந்த். விளைந்த மஞ்சளுக்கு நல்ல விலை கிடைக்கவில்லை, பருத்தி பயிர்கள் இளஞ்சிவப்பு காய்ப்புழுக்களால் தாக்கப்பட்டன, தரமற்ற விதைகளால் மிளகாயும் விளையவில்லை. “எங்கள் கடன்களை அடைக்க வேலைதேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்,” என்கிறார் 10ஆம் வகுப்பை பாதியில் நிறுத்திய ஸ்ரீகாந்த். வாகன உதிரிபாகங்களை பழுதுபார்க்கும் பயிற்சியில் இருந்துகொண்டு படித்து வந்த பாலிடெக்னிக் படிப்பை கோபிசந்த் கைவிட்டார்.
கடினமான தினக்கூலி வேலைக்காக பென்ஸ் சர்க்கிளில் செட்டி சகோதரர்களைப் போன்று தினமும் சுமார் 1000 பேர் காத்திருக்கின்றனர். பெண்கள் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து வந்து, மாலையில் திரும்புகின்றனர். வட்டத்தின் மூன்று மைல் ஆரத்திற்குள் உள்ள டிவைடர் அல்லது பாதையில் ஆண்கள் பெரும்பாலும் உறங்கிக் கொள்கின்றனர். ஆந்திராவின் வடக்கு ஸ்ரீகாகுலம் மாவட்டம் முதல் தெற்கு கடலோரமான மாநிலத்தின் நெல்லூர் வரையிலான பல்வேறு பகுதிகளில் இருந்து புலம்பெயர்ந்து அங்கு வந்துள்ளனர்.











