சில மாதங்களுக்கு முன் ஒரு மாலை வேளையில், வீட்டுக்கு வெளியே மண் தரையில் அமர்ந்து எலிக்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தார் சக்திவேல். எலிக்குட்டியின் வயிற்றில் லேசாக அழுத்தி ஓட விடுவார். அது ஓடும்போது வாலை பிடித்து பின்னால் இழுப்பார். ஒரு வயதே ஆகும் சிறு குழந்தை சக்திவேலின் ஒரே விளையாட்டு பொருள் அந்த எலிக்குட்டிதான்.
குழந்தையும் அதன் தாயான 19 வயது வனஜாவும் தந்தையான 22 வயது ஆர்.ஜான்சனும் பங்களாமேடு கிராமத்தில் ஒரு சிறு குடிசை வீட்டில் வாழ்கின்றனர். “பொம்மைகள் நாங்கள் வாங்குவதில்லை. பிறந்த குழந்தைகளுக்கென (எப்போதாவது) ஆரவார பொம்மை வாங்குவோம். கிராமத்தில் இருக்கும் யாரிடமும் அதிக பொம்மைகள் இருக்காது,” என்கிறார் வனஜா. கிராமப்புற வேலைத்திட்ட வேலைகளை வனஜா பார்க்கிறார். ஜான்சன் கட்டுமான வேலைகளையும் அவ்வப்போது செங்கல் சூளை வேலைகளையும் பார்க்கிறார். திருத்தணி ஒன்றியத்தின் செருக்கனூர் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமங்களில் மரங்கள் வெட்டும் வேலைகளும் செய்கிறார்.
“எங்கள் குழந்தைகள் வளர்ப்பு பிராணிகளோடு விளையாடும். முயல்கள், எலிகள், அணில்கள் போன்றவற்றை வளர்ப்பு பிராணிகளாக நாங்கள் வளர்க்கிறோம். பெரும்பாலும் குழந்தைகளுக்கு எலிகள்தான் பிடிக்கிறது. அவற்றை கண்டுபிடிப்பதும் சுலபம். எனக்கு முயல்களை பிடிக்கும். ரொம்ப மென்மையானவை. ஆனால் முயல்குட்டிகளை அத்தனை சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாது,” என்கிறார் 28 வயதாகும் எஸ்.சுமதி. கிராமத்தில் குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வி கற்று கொடுக்கிறார். செங்கல்சூளைகளிலும் நூறு நாள் வேலைத்திட்டத்திலும் கூட வேலை செய்கிறார்.
35 இருளர் குடும்பங்கள் வசிக்கும் திருவள்ளூரின் இக்கிராமத்தில் எலிக்குட்டிகள்தான் குழந்தைகளின் விருப்பத்துக்குரிய வளர்ப்புப் பிராணிகள். (பங்களாமேட்டின் புதையல்கள் என்ற கட்டுரையை பார்க்கவும்). சிறு விலங்குகள் கடிப்பதில்லை. எந்தவொரு வளர்ப்புப் பிராணியையும் போல குடும்பங்களுடன் தங்கி விடும். (ஒருமுறை ஒரு சந்திப்புக்கு கூடையில் வளர்ப்பு எலியை கொண்டு வந்த பெண்ணை சந்தித்தேன்).











