இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களில் முக்கியமான ஒரு நபர் கே வி ஜார்ஜ்குட்டி. இதைப் பற்றித் தெரியவந்தபோது பலர் எங்களைப் பார்த்துச் சிரித்தார்கள். இது சாத்தியமே இல்லை என்று ஏளனம் செய்தார்கள்” என்று புன்சிரிப்புடன் சொல்கிறார்.
இது பிப்ரவரி மாதம். விரைவில் கேரளாவின் சுட்டெரிக்கும் கோடைக்காலம். கே.வி ஜார்ஜ்குட்டியும் பாபு உலகண்ணனும் தங்கள் குடிசைகளின் வெளியே சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வப்போது வீசும் இனிமையான தென்றலின் குளிர்ச்சியை விட சிறிது தூரத்தில் 250 ஏக்கரில் பரந்து விரிந்து, பச்சைப்பசேலென்று காட்சியளித்த நெற்கதிர், அவர்கள் கண்களுக்கு குளிர்ச்சி அளித்தது, . இது கோட்டயம் மாவட்டத்தில் பல்லோம் வட்டத்தில் அமைந்துள்ள பனச்சிக்காடு தாலுகா. வரிசையாக, கண்கள் குளிர அமைந்திருக்கும் நெல்வயல்கள், இடையிடையே சலசலத்து ஓடும் நீர் ததும்பும் கால்வாய்கள், நெற்பயிரின் நீண்ட கூர்மையான இலைகளின் இடையிலிருந்து பறக்கும் பால்வண்ணப் பறவைகள், வயல்களின் குறுக்கே கட்டியிருந்த கம்பிகளில் அமர்ந்திருக்கும் கருப்பு நிறப் பட்சிகள் அழகுக்கு அழகு சேர்த்தன.
சில மாதங்களுக்கு முன்பு வரை, இவ்வயல்வெளிகள் வெறுமையாக காணப்பட்டன. 30 வருடங்களுக்கும் மேல் தரிசாகக் கிடந்த நிலங்கள்! பாபு, ஜார்ஜ்குட்டி, சுரேஷ்குமார், சிபுகுமார், வர்கீஸ் ஜோசப் ஆகியோரின் தளரா முயற்சியில் இத்தனை மாற்றம்! ”நிலத்தை மீண்டும் பயிர் செய்யும் நிலைக்குத் தயார் செய்வதுதான் மிக, மிகக் கடினமான வேலை. வயல்வெளியின் மூலைமுடுக்கு விடாமல் மண்ணைப் பதப்படுத்துவது, களை எடுப்பது, நீர்ப்பாசன கால்வாய்கள் அமைப்பது எனக் கடினமான வேலைகள் பல. சாதாரண நிலத்தை விட தரிசு நிலத்தை மீட்டெடுப்பது பத்துமடங்கு கடினம். மனித உழைப்பும் இயந்திர பலமும் இல்லாமல் முடியாத காரியம்” எனக் கூறுகிறார் பாபு. அவரும் அவரின் சக-விவசாயிகளும் இங்கிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சங்கணச்சேரியில் வசிக்கும் தேர்ந்த நெல் விவசாயிகள் ஆவர்.










