சத்தீஸ்கர் மாநிலத்தின் மத்தியப் பகுதியிலுள்ள, ராய்ப்பூர் மாவட்டத்தின் தாம்தாரி பகுதியிலிருந்து, சற்றேறக்குறைய ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள லோஹர்ஷி கிராமத்தில் செயல்படும் பெண்களுக்கான தொடக்கப்பள்ளி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த பள்ளியின் வெளிப்புற தோற்றமே அதன் வரலாற்றை சட்டென நமக்கு உணர்த்துகிறது ; அந்த பள்ளி வளாகத்தில் உள்ள அரச மரத்தின் சுற்றளவே அந்த மரம் 80 முதல் 90 வயது கொண்டது என்பதை காட்டுகிறது. ஒரு முறை நீங்கள் பள்ளியின் உள்ளே சென்று மாணவிகளைச் சந்தித்தால் , நீங்களும் அந்த பள்ளியின் நிகழ்காலத்தையும் , நேர்மறை ஆற்றலையும் காணலாம், அதுமட்டுமல்லாது, அந்த பள்ளி உண்டாக்கும் உள்ளார்ந்த அதிர்வையும் நீங்கள் அனுபவிக்கக்கூடும்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே ஏறத்தாழ மூன்று தசாப்தங்களாக செயல்பட்டு வந்த, இந்த பள்ளி 1918 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போதிருந்து இருந்து இன்று வரை உள்ள 96 ஆண்டுகளின் வருகைப்பதிவேடுகள், அங்குப் படித்த அனைத்து மாணவிகளின் பெயர்களோடும் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரியக்கூடிய நீலிமா நீதம், பழைய கரையான் அரித்த வருகைப்பதிவேட்டை ஒரு மரப்பெட்டியினுள் கண்டெடுத்ததாகவும், அந்தப் பதிவேட்டில் பள்ளி தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து பயின்ற மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியோரின் விபரங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அந்தப் பதிவேடுகளை புதிய உறைக்குள் இட்டு, பத்திரப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், அந்த பதிவேடுகள் இந்த பள்ளியின் வரலாற்றைத் தாங்கி நிற்கும் மிகமுக்கிய ஆவணம் என்றும் கூறியுள்ளார்.









